அமைச்சரவை மறுசீரமைப்பு திருப்திகரமாக இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் தேசிய அரசின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அரசிலுள்ள அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளும், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் கிடைக்கப்பெற்றன.
எனினும், 80இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு விகிதாசார அடிப்படையில் மிகவும் குறைவான பதவிகளே கிடைக்கப்பெற்றுள்ளன.
நீண்டகாலமாக ஐ.தே.கவுக்காக உழைத்து வருபவர்களுக்கு அமைச்சரவை மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்போது ஏமாற்றம் மாத்திரமே எஞ்சுவதாக கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஏற்கனவே, ஐ.தே.கவில் தலைமைத்துவத்துக்கு எதிரான பிரச்சினைகள் மத்தியில் அமைச்சரவை மறுசீரமைப்பிலும் முரண்பாடுகள் முற்றியுள்ளதால் பிரதமர் ரணில் பல்வேறு சவால்களை எதிர்க்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
அமைச்சரவை மறுசீரமைப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஐ.தே.கவின் காலி மாவட்ட எம்.பி. விஜேபால ஹெட்டியாராச்சி, “தேசிய அரசை அமைக்கப் பாரிய அர்ப்பணிப்புடன் ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் செயற்பட்டனர்.
அரசின் எவ்வித வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளாது எமது செயற்பாட்டை முன்னெடுத்து வந்தோம். ஒவ்வொரு முறையும் அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்போது எமக்குப் பெரும் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சுகின்றது” என்று கூறினார்.