அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே றிஷாட்டின் கைது முயற்சி என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்….
நாட்டை சர்வதிகாரத்துக்கு இட்டுச்செல்லும் இருபதாம் திருத்த சட்டத்துக்கு பௌத்த பீடங்களே எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.கத்தோலிக்க ஆயர் பேரவையும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அத்துடன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை அரசை ஆதரித்த கடும்போக்குவாதிகள் மத்தியில் அரசின் மீது பாரிய சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.
எனவே அரசுக்கு எழுந்துள்ள இவ்வாறான எதிர்ப்புக்களை திசைதிருப்பி கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனை கைது செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற அரசு முயற்சிக்கிறது.
இந்த அரசியல் பழிவாங்கல்களில் இருந்து அவரை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் அவருக்கு துணையாக நிற்போம்.