கடந்த 05 வருடங்களாக ஏமாற்றிவந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு வாக்களிக்காமல், வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் மக்கள் அனைவரும் இம்முறை கோத்தபாய ராஜபக்சவுக்கே வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“வடக்கு மக்களுக்கு நிர்மாணிக்கப்படவிருந்த வீடமைப்புத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு மக்களிடம் ஒன்றைக் கேட்கின்றோம். கடந்த 05 வருடங்களாக அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது? வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றோம் என்கின்ற வாக்குறுதி மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தது.
ஆனால் அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இந்தியாவிடமிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவி கிடைத்த போதிலும் வீடுகளை யார் ஊடாக நிர்மாணித்துக் கொடுப்பது என்கிற பிரச்சினையிலும், தரகுப் பணத்தை யார் பெறுவது என்கிற நெருக்கடியிலும் அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அதனால் வீடுகளை அமைப்பதற்கான ஆவணங்கள் அனைத்துமே மேசைவரை மட்டும் வரையறுக்கப்பட்டன. ஆகவே கடந்த 05 வருடங்களாக எதனையும் செய்யாத ரணில் – சஜித் யுகமா அல்லது யாழ்ப்பாணத்திற்கே கார்பட் வீதிகளை அமைத்துக்கொடுத்த, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பித்த, வடக்கிற்கு தங்களுடைய வாக்குகளினால் மாகாண சபை உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்குரிமையைக் கொடுத்த, கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த மகிந்த-கோத்தா யுகமா வேண்டும் என்பதை வடக்கு,கிழக்கு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கும் மகிந்த-கோத்தா இணைப்பையே தெரிவுசெய்ய வேண்டும். மாறாக ரணில்-சஜித் இணைப்பையல்ல. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ரணில்-சஜித் அல்ல, பக்கமாக பார்த்தாலும் ரணில்-சஜித் அல்ல.
எந்த நிறத்திலான கண்ணாடிகளை இட்டுப் பார்த்தாலும் மகிந்த-கோத்தாவை இணைப்பை மட்டுமே தெரிவுசெய்ய முடியும்”. என அவர் மேலும் கூறியுள்ளார்.