நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உரைக்கு அவையில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்றையும், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்தும் வகையில் பெய்யுரைப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.
புலம்பெயர் சமூகத்திற்காக இந்த உரை நிகழ்த்தப்பட்டதாகவும் மூன்று லட்சம் பேரை பிரபாகரன் மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், இதில் 295000 பேரை மீட்டதாகவும் ஏனையவர்களை புலிகள் கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அப்போதைய உயர் அதிகாரி நீல் புனே, அகதிகள் குறித்த அதிகாரி அமீன் அவாட் போன்றவர்கள் சிவிலியன்களுக்கு உணவு மற்றும் மருந்து விநியோகத்மை தொடர்பில் பெரிதும் பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கட்சி எனவும் அதனால் அவர்களை தடை செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர்கள் கிடைக்கும் என்ற காரணத்தினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறான உரைகளை நிகழ்த்துவதாகவும் தமிழ் புலம்பெயர் சமூகத்திற்காக இந்த உரை நிகழ்த்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நாடாளுன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட வேண்டுமென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கோரியுள்ளார்.
கஜேந்திரகுமார் தமிழ் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே அவர் பேசுகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்கள் பிணத்தை விற்று வாழ்க்கை நடத்துபவர்கள் என ரோஹித அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவிதமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத், பிரமித பண்டார தென்னக்கோன், டிலான் பெரேரா, சரத் பொன்சேகா உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரைக்கு நாடாளுமன்றில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.