தேசிய வாசிப்பு மற்றும் உள்ளுராட்சி மாதம் என்பனவற்றை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின்கீழ் இயங்கும் ஓட்டமாவடி மற்றும் மீராவோடை இரு நூலகங்களினதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வுகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் (2016.11.04ஆந்திகதி – வெள்ளிக்கிழமை) பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
”எதிர்காலத்தை வெற்றிகொள்ள காலதாமதமின்றி வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம் மற்றும் உரத்து வாசித்தல் போன்ற போட்டிகளில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப்பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், ஓட்டமாவடி மற்றும் மீராவோடை நூலகங்களின் நாளாந்த வாசகர்கள் நான்கு பேரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் ”முத்துக்கள்” கையெழுத்துப்பிரதி சஞ்சிகை வெளியீட்டு விழாவும் இடம்பெற்றதோடு, இதன் முதற்பிரதி செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் அவர்களினால் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு, உள்ளுராட்சி மாதத்தினை முன்னிட்டு (2016.10.31ஆந்திகதி – திங்கட்கிழமை) நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு தெரிவான மாஞ்சோலை சனசமூக நிலையம் மற்றும் ஓட்டமாவடி அல்-ஹிறா சனசமூக நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய ஓட்டமாவடி அல்-ஹிறா சனசமூக நிலையத்திற்கு பிரதம அதிதியினால் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறுக் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், வேள்ட் விஷன் முகாமையாளர் திருமதி. இந்துறோகாஸ் மற்றும் வேள்ட் விஷன் திட்டமிடல் பணிப்பாளர் அகிலன் அவர்களும், விஷேட அதிதியாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. தேவநேசன் அவர்களும் கலந்துகொண்டனர்.