Breaking
Mon. Nov 25th, 2024

இம்முறை கோறளைப்பற்று மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள கல்வியற்கல்லூரி ஆசிரிய நியமனங்கள் தொடர்பில் பாரிய சர்ச்சை நிலவுவதாக அறிய முடிகின்றது. ஆளணித்தேவைப்பாடுள்ள பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் மேலதிகமாக ஆளணிகள் காணப்படும் பாடசாலைகளுக்கே மீண்டும் இம்முறை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அண்மையில், கல்வியற்கல்லூரி ஆசிரியர் நியமனம் தொடர்பிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற, ஆளணி அவசியம், அவசரம் தேவைப்பாடுள்ள பாடசாலைகளுக்கே முன்னுரிமையளித்து ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களில் பல்வேறு அறிக்கைகளை விட்டிருந்தமை இங்கு கவனிப்பட்ட வேண்டிய விடயமாகும்.

அதாவது, கிழக்கு மாகாணத்திலுள்ள 1108 பாடசாலைகளில் 5021 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், இம்முறை கல்வியற்கல்லூரிகளிலிருந்து வெளியேறிய கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த 407 ஆசிரியர்களில் 192 பேர் கிழக்கு மாகாணத்திற்கும் ஏனைய 215 பேர் வெளி மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டிருந்தனர். இருந்தும், முதலமைச்சர் மேற்கொண்ட அயராத முயற்சியின் பயனாக, வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட 215 பேரும் மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கே கொண்டு வரப்பட்டு நியமிக்கப்பட்டனர். 407 ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்திற்குள் நியமனம் வழங்க முயற்சிகளை மேற்கொண்ட அனைத்துப் பெருமைகளும் முதலமைச்சருக்கே உரித்தாகும்.

ஆனால், கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த 407 கல்வியற்கல்லூரி ஆசிரியர்களும் மாகாணத்திற்குக் கொண்டு வரப்பட்டும், கூடுதலான நியமனங்கள் ஆளணித் தேவைப்பாடாகவுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படாமல் தேவைப்பாடற்ற பாடசாலைகளுக்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நியமனங்களூடாக பயனடைந்தவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளும், இம்முறை நியமனம் பெற்ற ஆசிரியர்களுமே. காரணம் இவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகலிலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்கள் தொட்டு தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வரும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களும் அவற்றைப் பொறுப்பேற்று நடாத்தும் அதிபர்களும் இந்நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுள்ளமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. பாடசாலைகளில் நிலவும் ஆளணித்தேவைப்பாடு குறித்து அதிபர்களும், கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரே நன்கறிவர்.

ஆனால், இம்முறை கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்கள் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தெரியாமல் உள்ளூர் அரசியல்வாதியொருவரின் தலையீட்டினாலும் அவரின் எதிர்கால அரசியலை நோக்காகக் கொண்டும் வழங்கப்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலைகளுக்கு ஆளணி வெற்றிடங்களை நிரப்புவது அரசியல்வாதியா? அல்லது கல்வி அதிகாரிகளா? என்கின்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

பாடசாலைகளில் இவ்வாறான அரசியல் ஊடுருவல் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அதிபர்களையும், ஆசிரியர்களையும் பாதிப்படையச் செய்ய வாய்ப்புள்ளது. முதலமைச்சரின் கணிப்பின்படி மாகாணத்திலுள்ள 5021 ஆசிரிய ஆளணிகளில் இம்முறை வழங்கப்பட்ட கல்வியற்கல்லூரி ஆசிரிய நியமனங்கள் 407 தவிர, இன்னும் கிழக்கு மாகாணத்திற்குத் தேவைப்பாடாகவுள்ள ஆசிரிய ஆளணி 4614 ஆகும்.

இவ்வாறான நிலையில், அடுத்த முறையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீண்டும் மத்திய கல்வியமைச்சிடம் 5021 வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்திலுள்ளதாகவே கூற வேண்டியதொரு நிலை, இந்நியமனங்கள் மூலம் ஏற்படுள்ளது. அரசியல் மயப்படுத்தப்பட்டு, முறையற்ற விதத்தில் கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல், அரசியல்வாதிகளின் எதிர்கால அரசியல் நலனைக் கருதிற்கொண்டு பாடசாலைகளுக்கு ஆளணிகள் வழங்கப்படுவதனூடாக மீண்டும் மீண்டும் பாதிப்புகளையே குறித்த பாடசாலைகள் எதிர்நோக்கலாம்.

அபிவிருத்திகளில் அரசியல் ரீதியான போட்டிகள் இருக்கலாம். ஆனால், மாணவர்களின் கல்வி விடயத்தில் இவ்வாறான அரசியல் ரீதியான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இவ்வாறான செயற்பாடுகள் ஒரு சமூகத்தின் கல்வியினை அழிக்கும் செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த அநியாயத்திற்கு துணை போனவர்கள் யார்?
இதற்கு பொறுப்பானவர்கள் யார்…
கிழக்கின் முதமைச்சரா…?
உள்ளூர் அரசியல்வாதிகளா…?
கல்வி அதிகாரிகளா…?
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *