Breaking
Mon. Nov 25th, 2024
(பிறவ்ஸ்)
முஸ்லிம் அரசியலில் புதிய யுகமாற்றம் நிகழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய அழுத்தக்குழுவான ஒரு இளைஞர் படை தேவை. தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களை கேள்விக்குட்படுத்தும் வகையில், அவர்களை பொறுப்புதாரியாக மாற்றுகின்ற ஒரு யுகமாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இளைஞர் காங்கிரஸ் பேரவை அமைப்பதற்கான முதற்கட்ட செயலமர்வு இன்று (09) கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிமைக்கு குரல்கொடுப்பதற்காகவே மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபினால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், இன்று பல அபிவிருத்திகள் கட்சிமூலம் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. இதனால் அபிவிருத்திகள் மட்டும்தான் கட்சியின் நோக்கம் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. மேடைப் பேச்சுகளும், பத்திரிகை அறிக்கைகளும் உரிமைக்கு தீர்வை கொண்டுவரமாட்டாது. அதற்கான காத்திரமான முன்னெடுப்புகளை செய்தாகவேண்டும்.

உரிமைக்காக உருவாக்கப்பட்ட இக்கட்சி இன நல்லிணக்கத்துக்கு தூரப்பட்ட ஒரு கட்சியாக இருக்கமுடியாது. உலகளவில் கூட இன நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டு வரும்வகையில் இளைஞர்களின் பங்களிப்பு மிக பிரதானமானது. முஸ்லிம் சமூகம் மீதான பேரினவாதிகளின் சந்தேகத்தை கலைவதற்கான எங்களுடைய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் அவதானம் செலுத்தவேண்டும். இதில் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது.

இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் சிங்கள மற்றும் தமிழ் சமூகத்துடன் உறையாடல்களை மேற்கொள்ளவேண்டும். விளையாட்டு, கலைநிகழ்ச்சி போன்றவற்றை நடாத்தி அவர்களுடன் நல்ல தொடர்புகளை பேணமுடியும். இவ்வாறான செயற்பாடுகள் எம்மீதுள்ள வீண் சந்தேகங்களை களைவதற்கு உதவியாக இருக்கும். முஸ்லிம்கள் மீதான வீண் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நான் புத்தகமொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது விரைவில் வெளிவரும்.
இளைஞர் காங்கிரஸ் அணியின் அனர்த்த நிவாரணக்குழு அண்மைக்காலங்களில் சிறப்பாக செயற்பட்டு வந்தது. இதை நாடுமுழுவதும் விஸ்தரிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அடங்கிய அனர்த்த நிவாரணக்குழுவை அமைக்கவேண்டும். இதுதவிர, மக்களின் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் வீடுகளில் மரங்களை நட்டுவிட்டு, அந்தக் குடும்பத்துக்கும் கட்சிக்குமான உறவுப்பாலமாக இளைஞர்கள் இருக்கவேண்டும்.
எதிர்காலங்களில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தேவையான சமூக செயற்பாடுகளில் இளைஞர் காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதோடு, கட்சியின் வளர்ச்சிப் பணியிலும் பங்களிப்பு செய்யவேண்டும். ஒவ்வொரு இளைஞரும் இந்தக் கட்சி எதற்காக உருவாக்கப்பட்டது, கட்சி தியாகங்கள் என்று சகல விடயங்களை தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கட்சித் தொண்டர்கள் போராளிகளாக மாறி கட்சியை உரமூட்டமுடியும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *