ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தைப் பராமரிக்கும் செலவீனத்தை ஈடுசெய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் அரசாங்கம் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றுமுன்தினம் அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலினையடுத்து இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இம் மீன்பிடித் துறைமுகத்தின் செலவுகளுக்கான வருமானம் ஈட்டப்படுவதில்லை என்பது கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தப்பட்டது. இத்துறைமுகம் ஒரு வெள்ளை யானை எம்மால் இதனை பராமரிக்க முடியாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுகம் ஒரு மீன்பிடித் துறைமுகமாகும். 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இத்துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
உகந்த சூழல் மதிப்பீடு மற்றும் சாத்தியப்பாடுகள் எதுவும் கவனத்திற் கொள்ளப்படாது ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சின் அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
250 க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் நங்கூரமிடப்படுவதற்கு திட்டமிட்டு இத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டாலும் தற்போது மீன்பிடிப் படகுகள் அனைத்தும் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளன. துறைமுகத்துக்குள் படகுகள் பிரவேசிப்பது ஆபத்தானதாகவுள்ளது.
சுமார் 40 மில்லியன் கியுபிக் மீட்டர் மணல் இப் பகுதிக்குள் நிறைவதால் அம் மணலை அப்புறப்படுத்துவதற்கு அமைச்சு சுமார் 350 மில்லியன் ரூபாவினை செலவிட வேண்டியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு அமைச்சு செலவீனங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சின் அதிகாரி தர்ம வன்னி நாயக்க தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சு இவ்விவகாரம் தொடர்பில் துறைமுக அதிகார சபை, மீன்பிடி துறைமுக கூட்டுதாபனம் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர ஒலுவில் துறைமுகத்தை மூடுவது பற்றி அரசாங்கத்துடனும் பேசவுள்ளார்.
குறிப்பிட்ட துறைமுகம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சிலிருந்து இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு மாற்றப்பட திட்டமிட்டிருந்தாலும் அத் திட்டம் அண்மையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.