(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)
கிழக்கிலுள்ள ஊர்களில் ஒலுவில் இயற்கை வளங்கள் மிகைத்துக் காணப்படும் ஒரு ஊராகும்.விடுமுறை காலங்களில் ஒலுவிலில் ஓய்வெடுத்துச் செல்ல பல ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் படை எடுக்கும்.தற்போது அதன் இயற்கை வளங்கள் கடலால் சுரண்டப்பட்டு அந் நிலைமை மாற்றம் பெற்றுள்ளது.1998ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி அப்போது துறைமுக அமைச்சராகயிருந்த அஷ்ரபினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒலுவிலில் துறைமுகமொன்றை நிறுவவுள்ளதான செய்தி மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.இதனை முன்னாள் இலங்கை அதிபர்களில் ஒருவரான சந்திரிக்கா அஷ்ரபிற்கு இவ் அமைச்சைக் கொடுத்து நிர்மாணிக்கக் கூறியதாக அஷ்ரப் தனது நாற்பத்தெட்டு பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து அஷ்ரபின் ஆளுமையை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.பிற்பட்ட காலப்பகுதியில் சந்திரிக்கா அரசு இத் துறைமுகத்தை நிர்மாணிக்க பின்வாங்கியது.இதனை அறிந்த மர்ஹூம் அஷ்ரப் தனது நாற்பத்தெட்டு பக்கக் கடிதத்தில் இத் துறைமுக அபிவிருத்தியை கால தாமதப்படுத்தாமல் செய்ய வேண்டுமென பல காரசாரமான வினாக்களை சந்திரிக்காவை நோக்கி விடுத்து வலியுறுத்தியிருந்தார்.இது வெளியிடப்பட்டு சிறிது காலத்தினுள் அஷ்ரப் மரணித்ததுடன் இத் திட்டமும் அப்படியே மரணித்துவிட்டது.
இதன் பிற்பாடு சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் 2008ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு நவோதயா திட்டத்தின் கீழ் ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இக் காலப்பகுதியில் மு.கா கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி மஹிந்த அரசிலிருந்து வெளியேறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.சந்திரிக்கா செய்ய மறுத்த ஒன்றை மஹிந்த செய்தமையை வைத்து சிறுபான்மையினரின் விடயத்தில் சந்திரிக்காவையும் மஹிந்தவையும் ஒப்பிட்டுக்கொள்ள முடிகிறது.இது மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகமாக 2013-09-01ம் திகதி முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்ஸவினால் திறக்கப்பட்டிருந்தது.அஷ்ரபின் உதிரத்தில் உதித்த மு.கா மஹிந்த அரசோடு ஒட்டிக்கொண்டிருந்த காலப்பகுதியில் (2008யிற்கு முன்பு), 2002ம் ஆண்டு இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் மிகப் பெரும் பேசும் பலத்தோடு இருந்த காலப்பகுதியில் அஷ்ரப் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியான இத் திட்டத்தை மேற்கொள்ளக் கூடிய சாதகமான நிலையுமிருந்தது.இவ் விடயத்தில் மு.கா இச் சாதகமாக நிலை எதனையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
இவ்வாறு பெரும் வரலாறுகளோடு அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தின் அமைவிடம் காரணமாக கடலானது கரையோரங்களை விழுங்கிக் கொண்டு ஊரினுள் பிரவேசித்துள்ளது.கடலுக்கும் கரையோரத்திலுள்ள வீடுகளுக்குமிடையில் சுமார் நூறு மீட்டர் தூரமளவே உள்ளது.இதற்கு முன்பு மிக நீண்ட தூரம் பயணித்தே ஒலுவில் கடற் கரையை கண்ணுறக் கூடியதாக இருந்தது.இந் நிலைமை இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் ஒலுவிலிலுள்ள பல வீடுகள் கடலுக்குள் உள் வாங்கப்பட்டு விடும்.தேர்தல் காலத்தில் சீசன் வியாபாரிகள் போன்று ஒலுவிலுக்கு வரும் அரசியல் வாதிகள் அப்படி இப்படி என பம்பாத்து காட்டிவிட்டே செல்கின்றனர்.இத் துறைமுகத்தின் அமைவிடம் காரணமாக கடலரிப்பு ஏற்படும் போது இது அஷ்ரபினால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி என்பதால் அது அஷ்ரபின் நாமத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.அஷ்ரபின் நாமம் களங்கப்படும் போது அதனை என்ன விலை கொடுத்தாவது தீர்க்க வேண்டிய கடப்பாடு மு.காவிற்கு உள்ளதல்லவா?
இத் துறைமுகமானது சரியான சாதக அறிக்கைகள் (feasibility report) இன்றி அமைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.ஒரு துறைமுகத்தை சாதாரணமாக சாதக அறிக்கைகள் இன்றி (feasibility report) யாராலும் நிறுவிட முடியாது.அவ்வாறு அமைக்க இது ஒரு ரூபாய் இரண்டு ரூபாயில் அமைக்கப்படும் திட்டமுமல்ல.இத் திட்டம் டென்மார்க் அரசாங்கத்தின் பத்து வருட கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.இவ்விடயத்தை அறிவதன் மூலம் இத் துறைமுக நிறுவலின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளலாம்.இது தொடர்பில் சாதக அறிக்கைகள் (feasibility report) தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட lanka hydraulics institute,இத் துறைமுகம் நிறுவப்பட்டால் அதனை அண்டிய பிரதேசம் கடலரிப்பிற்குள்ளாகும் எனக் கூறியதை வைத்து சிலர் வேறு பொருள் கொடுக்க விளைகின்றனர்.செயற்கையாக ஒரு துறைமுகத்தை அமைக்க வேண்டுமாகயிருந்தால் கடலின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும்.கடலின் ஆழம் அதிகரிக்கும் போது அதனை அண்டிய கடல் பகுதி அரிப்பிற்குள்ளாகும்.அதாவது செயற்கையாக ஒரு துறைமுகம் அமைக்கப்படும் போது அதனை அண்டிய பிரதேசம் கடலரிப்பிற்குள்ளாகும் என்பது பலரும் அறிந்த விடயமே.இவ்வாறு ஒரு பிரதேசம் கலரிப்பிற்குள்ளாவது தீர்வற்ற பிரச்சினையுமல்ல.கடலரிப்பு பிரச்சினை என்பது ஒலுவிலில் உள்ள ஒரு பிரச்சினை மாத்திரமுமல்ல.இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கரையோரத்தை அண்டியுள்ள பிரதேசங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.ஏன் நிந்தவூர்,கல்முனை,மருதனை கடற்கரைகள் கூட கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவற்றிற்கு அணைகளை இடுவதன் மூலம் தடுக்க முடியும்.தென் மேல் மாகாணங்களில் கற்கள் கொண்ட அணைகள் பல கிலோ மீட்டர் தூரமளவில் இடப்பட்டு பாதுகாக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.அங்கு இவ்வாறான திட்டங்களை நடை முறைப்படுத்த முடியுமாகயிருந்தால்,இங்கு அதனை நடை முறைப்படுத்துவதொன்றும் பெரிதான விடயமல்ல (ஒலுவிலில் சில மீட்டர் தூரமே கற்கள் கொண்ட அணைகள் அமைக்கப்பட்டுள்ளது).
நான் ஆய்வுகளோடு முன் மொழியப்பட வேண்டிய தீர்வை எந்த வித ஆய்வுளுமின்றி மிக இலகுவாக கூறிவிட்டேன்.இவ்வாறான பிரச்சினைகள் எழும் போது lanka hydraulics institute போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து இதன் தீர்வுக்கான ஆய்வறிக்கைகளை பெற வேண்டும்.இதுவே இதன் தீர்விற்கான சிந்தனையின் முதற்படி.இப்படியே காத்தான்குடி கடலரிப்பு விவகாரம் கிழக்கு முதலமைச்சரால் கையாளப்பட்டது.இவ்விடயத்தில் இந் நடைமுறை பின்பற்றப்படவில்லை.இவ் விடயத்தில் கடற் தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர,துறைமுக மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோரிற்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்கள் இதன் நிரந்தரத் தீர்விற்கு ஆரம்பகட்ட அறிக்கையை (preliminary report) தயாரிக்கும் நோக்கில் ஒரு இணைந்த குழுவை நியமிக்க ஏற்றுக்கொண்டிருந்தனர்.இதன் பிற்பாடு இவ் விடயத்தில் எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை.இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தொடரான அழுத்தங்களை வழங்கும் போதே இது தொடர்பில் அவர்கள் கரிசனை கொள்வார்கள்.
இக் கடலரிப்பு பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் பொடு போக்குத் தனமாக செயற்படுகிறார்கள் என்பதை வேறு சில விடயங்களை வைத்தும் அறிந்து கொள்ளலாம்.இத் துறைமுகத்திற்காக 2008ம் ஆண்டளவில் நாற்பத்தெட்டு மக்கள் காணிகள் அரசால் நிர்பந்தமாக சுவிகரிக்கப்பட்டிருந்தது.இது வரை இக் காணிகளுக்கான சரியான நிவாரணம் அரசால் கூறப்பட்ட வகையில் கூட வழங்கப்படவில்லை.இதனைக் கூட பெற்றுக்கொடுக்க இயலாத முஸ்லிம் அரசியல் வாதிகளால் பெருமளவான பணச் செலவுடனும்,தொழில் நுட்பங்களுடன் தீர்வை பெற்றுக்கொடுக்கக் சாத்தியமான கடலரிப்பிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென நம்ப இயலுமா? இக் கடலரிப்பு பிரச்சினை எழுவதற்கு முன்பு சுவீகரிக்கப்பட்ட காணிகளின் நிவாரப்பிரச்சினையே ஒலுவில் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தமை இவ்விடத்தில் நினைவூட்டத்தக்கது.இங்கு நான் கூற வரும் விடயம் இது ஒரு தீர்வற்ற பிரச்சினையல்ல.தொழில் நுட்பம் மலிந்து கிடக்கும் இக் காலத்தில் இதற்கு தீர்வில்லை என்பது நகைப்பிற்குரியது.எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஆளுமையற்ற தனத்தின் விளைவாகவே இப் பிரச்சினை இத்தனை நாள் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது.
தற்போது ஒலுவில் மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வீதிக்கு இறங்கியுள்ளனர்.ஒலுவிலைப் பொறுத்த மட்டில் அது மு.காவின் கோட்டை.மு.காவின் சேவல் அங்கிருந்துதான் கிழக்கு விடியலை நோக்கி கூவியது.அஷ்ரப் ஒலுவில் என்ற சிறிய கிராமத்தில் இத் துறைமுகத்தையும்,ஒரு பல்கலைக்கழகத்தையும்,தான் தங்குவதற்கான விடுதியையும் (இக் கடலரிப்பால் இவ் விடுதியின் ஆயுளும் இன்று அல்லது நாளை என்றுள்ளது) அமைத்து அதன் மீதுள்ள தன் பற்றை வெளிப்படுத்தியிருந்தார்.இந்த மக்கள் தங்களது உரிமைகளுக்காக வீதிக்கு இறங்கியுள்ளமை அஷ்ரபை இழிவுபடுத்துவது போன்று என்றாலும் தவறில்லை.தற்போதும் ஒலுவில் மு.காவின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்று.மக்கள் வாக்களித்துவிட்டு வீதிக்கு இறங்கி தங்களது உரிமைகளை கேட்பதென்றால் இவர்கள் எதற்காக மு.காவிற்கு வாக்களித்தார்கள்.
குறித்த பகுதி வாக்கினூடாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான் அப் பகுதியின் பிரச்சினைக்கான தீர்வை அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்க முயல வேண்டும்.அதற்கு அரசு மறுத்தால் அவர்கள் தலைமையில் தான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.மக்கள் இவ்வாறான ஆர்பாட்டங்களை அரசுக்கெதிராக முன்னெடுத்துள்ளமை முஸ்லிம் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்ற செய்தியையும் கூறுகிறது.ஒரு புறத்தில் ஒலுவில் மக்களை சாதூரியமானவர்களாகவும் கூறலாம்.முஸ்லிம் கட்சிகள் இன்று வரும் நாளை வருமென கூறிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இற்றை வரை கல்முனைக்கு வந்து சேரவில்லை.இதனை வைத்துப் பார்க்கும் போது இவ்வாறான விடயங்களைக் கையாள இவர்களை நம்பிச் செயற்படுவதை விட நேரடியாக அரசின் பக்கம் தலைநீட்டுவது பொருத்தமானது.இம் மக்கள் முஸ்லிம் கட்சிகளைப் புறக்கணித்து அரசை நாடிச் செல்கின்றமை பேரினக் கட்சிகள் மீதான ஈர்ப்பிற்கும் சிறிதான வித்திடலைச் செய்வதோடு கிழக்கின் எழுச்சிக் கோசத்திற்கும் வலுச் சேர்க்கும்.
தற்போது இத் துறைமுகத்தை அகற்ற வேண்டுமென்ற கோசம் மிக இலகுவாக எழுந்து வருகிறது.ஒரு இடத்தின் அபிவிருத்தி என்பது பல விடயங்களில் தங்கியிருக்கும்.அதில் ஒன்று தான் இவ்வாறான துறைமுகங்களை எமது பிரதேசத்தில் உள் வாங்குவதாகும்.உலகில் பிரயாண வழிகளில் (mode of transport) விமான நிலையங்களுக்கு அடுத்து துறைமுகங்களே (harbours) முக்கிய இடத்தை வகிக்கின்றன.தற்போது இத் துறைமுகமானது மீன் பிடித் (fishery harbour) துறைமுகமாகவே இயங்கி வருகிறது.இதன் மூலம் பெரிதான நன்மைகளை எமது சமூகம் சுவைத்திட முடியாது.இது ஆழ் கடல் மீன் பிடியாளர்களுக்கே அதிகம் நன்மை பயக்கும்.ஒலுவிலில் பெரும் பாலும் சிறிய ரக மீன் பிடித் தொழிலாளர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் விளைவாக ஒலுவிலில் சிறியரக மீன் பிடியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட மீன் பிடியாளர்களுக்கு ஆழ் கடல் மீன் பிடியை நோக்கிய வழி காட்டல்களை காட்டுதல் மற்றும் இதர பல தொழில் வழி காட்டல்களைக் காட்டுவதன் மூலம் தீர்வை வழங்கியிருக்கலாம்.இதனையெல்லாம் நாம் தற்போது தெரிவு செய்துள்ள பிரதிநிதிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.அரசு மீன் பிடித் துறைமுக ஒன்றிற்கு இத்தனை பாரிய செலவை செய்திருக்க வேண்டிய அவசியமுமில்லை.
இது வர்த்தகத் துறைமுகமாகவும் மாறும் போது (commercial harbour) இதன் மூலம் இதனை அண்டிய பிரதேசங்கள் துரித அபிவிருத்தியடையும்.மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும்.இங்குள்ளவர்கள் கொழும்பு செல்லும் தேவைகள் குறைவடையும்.எமது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அபரிதமான பங்களிப்பை வழங்கும் எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.வர்த்தகத் துறைமுகங்களின் (commercial harbour) அபிவிருத்திக்கு அரசின் பங்களிப்பும் அவசியம்.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தேவையான ஏற்றுமதி,இறக்குமதிப் பொருட்களை இத் துறைமுகத்தினூடாக கையாளும் போது இத் துறைமுகம் பாரிய அபிவிருத்திப் பாதையில் பயணித்திருக்கும்.இத் துறைமுகம் அமைத்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஒரு கப்பல் கூட ஒலுவில் துறைமுகத்திற்கு வரவில்லை என்ற நகைப்பு வார்த்தைகள் தான் வந்திருந்தன (தற்போதைய நிலவரத்தை நான் அறிந்த கொள்ள முயன்றும் என்னால் அதனை அறிந்து கொள்ள முடியவில்லை).இப்படி இருந்தால் இத் துறை முகம் எங்கனம் முன்னேறும்? இதன் பலா பலன்களை எவ்வாறு சுவைத்துக் கொள்ள முடியும்.நிலத்தை அகழ்ந்தமைத்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் இன்று அழகிய முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.இத் துறைமுகத்தை எவ்வாறு சீராக இயக்குவது என்ற திட்டங்களை அரசை நம்பி இருக்காது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் வகுத்து இவ்விடயத்தில் கரிசனை கொண்டு அரசிற்கு அழுத்தம் வழங்கிருந்தால் இத் துறைமுகத்தின் உண்மைப் பலனை ஒலுவில் மக்கள் சுவைத்திருப்பார்கள்.இவ்வாறு செய்திருந்தால் ஒலுவிலைச் சேர்ந்தவர்கள் தேனீர்க் கடை போட்டே பிழைப்பை நடாத்தியிருக்கலாம்.
அஷ்ரப் இத் திட்டத்தை ஆரம்பித்த காலப்பகுதியில் இது அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களை துண்டாடுவதற்கான சதி போன்ற சில விமர்சங்கள் எழுந்திருந்தன.இவ்வாறான விமர்சனங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மு.காவின் ஸ்தாபகத் தவிசாளரான சேகு இஸ்ஸதீனின் பங்கு அபரிதமானது.தற்போது இவ்வாறான கருத்துகளைக் மேல்க் கிழப்பி சேகு இஸ்ஸதீனை அதீத தூர நோக்கு சிந்தனா சக்தி கொண்டவராக சிலர் உருவகம் கொடுக்க முயற்சிக்கின்றனர்.தற்போது எழுந்துள்ள பிரச்சினை கடலரிப்பு தொடர்பான பிரச்சினை என்பதால் சேகு இஸ்ஸதீன் போன்றோர் முன் வைத்த குற்றச் சாட்டுகளுக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்குமிடையில் எதுவித சம்பந்தமுமில்லை.இவ்வாறான திட்டங்களின் மூலம் பேரின மக்கள் எமது பகுதிகளினுள் நுழைய வாய்ப்புள்ளது.அவர்கள் நுழைந்தாலும் எமது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கான சாதகத் தன்மை குறைவு.அவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களினுள் எல்லைப் படுத்தப்பட்டிருப்பார்கள்.எமது பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் தொழிலில் ஈடு படக் கூடாது என பேரின மக்கள் சிந்தித்தால் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன? முஸ்லிம்கள் இவ்வாறான குறுகிய சிந்தனைகளை விலங்கிட்டு வீசி எறிய வேண்டும்.
இதனை அமைச்சர்களான ஹக்கீம்,றிஷாத் ஆகியோரது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் செய்ய முடியாது.மத்திய அரசே இதற்கான பூரண நிதியை ஒதுக்க வேண்டும்.ஒலுவில் போன்ற பிரதேசங்கள் முஸ்லிம் கட்சிகளின் ஆளுகைக்குட்பட்டிருப்பதால் இம் மக்களை முஸ்லிம்கள் கட்சிகளை விட்டும் தூரமாக்கி பேரினக் கட்சிகளின் பால் ஈர்க்கும் நோக்கிலும் இப் பிரச்சினையை தீர்க்காது இழுத்தடிப்புச் செய்யலாம்.எமது அரசியல் வாதிகள் பேரினக் கட்சிகளை நம்பி பிழைப்பு நடத்துவதால் காரசாரமான எந்த நடவடிக்களையும் அரசுக்கெதிராக மேற்கொள்ள மாட்டார்கள்.இது ஒன்றும் ஐ.நா சபை சென்றோ அல்லது அரசியலமைப்பை மாற்றியோ சாதிக்கக் கூடிய ஒன்றல்ல.இது தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக மு.கா மிகக் கடுமையான நிலைப்பாட்டிற்கு வர வேண்டிய நேரம்.இப் பிரச்சினையைத் தீர்க்கவே இப்படி எமது முஸ்லிம் கட்சிகள் பின்வாங்கினால் அரசியல் யாப்பு மாற்ற விவகாரம் போன்றவற்றை முஸ்லிம்களுக்கு பொருத்தமான வகையில் அமைத்துக்கொள்ள அரசுக்கு அழுத்தம் வழங்குவார்கள் என நம்பலாமா.
குறிப்பு: இக் கட்டுரை இன்று செவ்வாய் கிழமை 02-08-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.