• நாட்டுக்குள் பொதுச் சட்டத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குப் பாராட்டு…
• கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முழு ஆதரவு…
• செயலணி முன் கருத்துத் தெரிவிக்க பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் ஆர்வம்…
உலகில் எந்தவொரு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படாத ஒரு கருத்தை கருப்பொருளாகக் கொண்டு, நாட்டுக்குள் பொதுச் சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி பாராட்டுக்குரியது என, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள் தெரிவித்தனர்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழகச் சமூகத்தின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற போதே, அவர்கள் இந்தப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
கொழும்பு, ருஹுணு, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், தென்கிழக்கு, பேராதனை, களனி, ரஜரட்ட, வயம்ப உள்ளிட்ட 18 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கைக்குள் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினர் கொண்டிருக்கும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை அவதானத்துக்கு உட்படுத்தி, அவற்றை ஆராய்ந்த பின்னர் நாட்டுக்குள் செயற்படுத்தக்கூடிய கருத்துருவைச் சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் இந்த ஜனாதிபதிச் செயலணி உருவாக்கப்பட்டது.
அதற்காக, பல்கலைக்கழகச் சமூகத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பலவும் இதன்போது முன்வைக்கப்பட்டதோடு, இந்தச் செயலணியினால் இதுவரை நடத்தப்பட்ட சந்திப்புகளில், இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவமிக்கதாக அமைந்திருந்ததென்று, செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
வளமான மண், வளமான நிலம், சுபீட்சம், நாகரிகம் மற்றும் கலாசாரத்தை மதிக்கும் ஒரு சுதந்திர நாடொன்று எமக்கு அன்று உரித்தாக இருந்தது. ஏகாதிபத்தியவாதிகள் எங்களிடம் இருந்து பறித்த அந்த நாட்டை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் கோர வேண்டுமெனவும் தேரர் தெரிவித்தார்.
களத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான புதிய அணுகுமுறையாகவே இந்தச் செயலணி முன்னோக்கி நகர்கின்றது என்றும் நல்ல நோக்கங்களை எழுத்துக்களில் மாத்திரம் வைத்திருப்பதில் பயனில்லை என்றும் அவற்றை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திய தேரர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் நமக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதற்காக, அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் இணைந்துப் பயணிக்கத் தமது குழு தயாராகவே உள்ளதென்றும் தேரர் தெரிவித்தார்.
சர்வதேசச் சட்டங்களுடன் உள்நாட்டையும் இணைப்பது தேசியத் தேவையாக அடையாளம் காணப்பட வேண்டும். ஒரு சமூகத்துக்கோ அல்லது குறிப்பிட்ட சிலருக்கோ அநீதி இழைக்கும் வகையில் சட்டத்தில் முரண்பாடுகள் இருந்தால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டுமென்று, கொழும்புச் சட்ட பீடத்தின் பேராசிரியர் வசந்தா செனவிரத்ன தெரிவித்தார்.
அரசியலமைப்பு என்பது ஒரு மாய ஆவணமல்ல. அடிப்படைச் சட்டங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதைக் கருத்திற்கொண்டு, ஒரே சட்டத்தால் ஆளப்படும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமென்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
பல்வேறு இனங்கள், கலாசாரங்கள் மற்றும் மொழிகள் காணப்படுவதென்பது, ஒரு நாட்டின் பலமாகவும் அந்நாட்டின் பெறுமதியாகவும் கருதப்படுகிறது. அதனால், எந்தவோர் இனத்தைச் சார்ந்த மக்களையும் புண்படுத்தாத சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் தேவை எழுந்துள்ளதென்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்காக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தினது ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
செயலணியின் முன்னால் கருத்துத் தெரிவிப்பதற்கு, பல்கலைக்கழக அறிஞர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.
மாறிவரும் உலகை எதிர்கொள்ளும் வகையில் சட்டமும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்த அவர்கள், அதற்குத் தேவையான பொறிமுறையானது, இந்தச் செயலணி மூலம் முன்வைக்கப்படும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர்.
“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான பயணத்தில், போதிய சட்ட அறிவு இல்லாதது ஒரு பிரச்சினையாக உள்ளதென்று எடுத்துக்காட்டிய பல்கலைக்கழக மாணவர்கள், தேசிய கல்விக் கொள்கை மூலம் அதைச் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.
பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ முதுகலை நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் சமத் தர்மரத்ன, ருஹுணு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கயத்திரி விஜேசுந்தர, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ஜே.எம்.எஸ்.பீ.ஜயசுந்தர, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பிரிவின் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் எம்.ஏ.எம்.ஃபவுசர், வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அசங்க பல்லேகெதர, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை விரிவுரையாளர் கயான் பண்டார, பேராசிரியரான சலீகா ஃபாருக், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதி சம்பத் புஞ்சிஹேவா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மால் தேவசிறி, பேராசிரியர் சர்வேஸ்வரன், சிரேஷ்ட பேராசிரியர் ஹலீம் அபூபக்கர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் சரண்யா சாமித்தம்பி, களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எச்.எம்.நவரத்ன பண்டா ஆகியோரும் இதன்போது கருத்துத் தெரிவித்ததோடு, Zoom தொழில்நுட்பத்தின் ஊடாகவும், பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணியானது, நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்று வருகின்றது.
மேலும், அச்செயலணியைத் தொடர்புகொண்டு நேரத்தை ஒதுக்கிக்கொண்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள செயலணியின் அலுவலகத்துக்குச் சென்று, தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

செயலணியின் உறுப்பினர்களான பேராசிரியர் சாந்தி நந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, எரந்த நவரத்ன, பானீ வேவல, டொக்டர் சுஜீவ பண்டிதரத்ன, அசீஸ் நிசார்தீன் ஆகியோரும் செயலணியின் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
