Breaking
Sun. Nov 24th, 2024

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (வியாழக்கிழமை)
நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “நான் நாடாளுமன்றத்தில் சிங்களத்தில்
உரையாற்றுகின்றேன் என்பதற்காக என்னை விமர்சிக்கலாம். ஆனால்
விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். விமர்சனங்களாலேயே நான்
வளர்ச்சியடைகின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் ‘ஒரே நாடு ஒரே
சட்டம்’ என்ற விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, இந்த இடத்தில் ஒரு விடயத்தினைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி
பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று றோயல்
பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளியும்
பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அப்படியாயின், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையின்கீழ் சிறைச்சாலைகளில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின்கீழ்
விடுதலை செய்யப்பட வேண்டும். சிலர் எவ்வித குற்றச்சாட்டுக்களோ அல்லது
விசாரணைகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படியெல்லாம், தமிழ் மக்களுக்காக நான் பேசுகின்றேன் என்பதற்காக என்னை
இனவாதி என எண்ணிவிட வேண்டாம். நான் ஒன்றும் இனவாதியில்லை. நான் கண்டியிலேயே
கல்வி கற்றேன். எனக்கும் அதிகளவான சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள்.

இதேவேளை, இந்த நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு வீழ்ச்சி என்று
சொல்லப்படுகின்றது. ஆனால், எங்களுக்கு 10 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.

உண்மையில் இந்த நாடாளுமன்றத்துக்கு நாம் வருவதற்கான நோக்கமே தமிழ்
மக்களுக்கான அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பதற்காகவே. எனவே, 10
உறுப்பினர்களாகவோ ஐந்து உறுப்பினர்களாகவோ இருந்தாலும் சரி எமக்கு அரசியல்
பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும்.

அந்தவகையில், சிலநேரம் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால்
நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியமே இருக்காது. மாகாண
சபையின் ஊடாக எங்களது வேலைத் திட்டங்களை செய்யக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் அரசாங்கத்துக்கு ஆணித்தரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு
நிரந்தரமான தீர்வைத் தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *