களுத்துறையின் ஒரு பிள்ளைக்காக பெற்ற தாயும் வளர்த்த தாயும் போராடும் பாசப்போராட்டம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
ஒரு பிள்ளைக்காக இரு தாய்கள் உரிமை கோரியமையினால் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
வழக்கில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, குறித்த பிள்ளையை சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றரை வயதான இந்த பிள்ளையின் பெற்ற தாய் தமிழ் பெண்ணாகும். அவரை வளர்த்தவர் ஒரு முஸ்லிம் பெண்ணாகும்.
இருவரும் வெளிநாட்டு தொழிலுக்காக வைத்திய பரிசோதனைக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே சந்தித்து கொண்டுள்ளனர்.
இந்த வைத்திய பரிசோதனையில் தமிழ் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் முஸ்லிம் பெண், தமிழ் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர் முஸ்லிம் பெண் அந்த குழந்தையை தானே வளர்த்துள்ளார். பின்னர் சர்வதேச பாடசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் குழந்தைக்கான உரிமை பிரச்சினை ஒன்று ஏற்பட்டு இரண்டு தாயும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தில் தன்னை வளர்த்த தாயிடம் செல்வதற்கு பிள்ளை விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கு பெற்ற தாய் அனுமதி வழங்காமையினால் பிள்ளையை சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.