எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் நேற்று ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் மாதம் 16, 23, 30 ஆகிய திகதிகளில் ஏதாவது ஒரு திகதியில் நடத்துவது என்று முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பாக நேற்றும் ஆராயப்பட்டு மேற்குறிப்பிட்ட கால எல்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கால எல்லைக்கு ஓர் திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்றும், 2019ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியில் இந்தக் காலப்பகுதிக்குள் நிறைவுறுத்தப்படாது என்பதால் 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்துவதால் 18 வயதைக் கடந்து ஒன்றரை ஆண்டு கடந்தவர்கள் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்பதால் விசேட ஏற்பாடாக 18+ திட்டத்தின் மூலம் 2019ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பதிவு செய்த தற்போது 18 வயதைத் தாண்டிய புதியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான விசேட திட்டத்தின் கீழ் சட்ட வரைவு ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவரைவை அமைச்சரவை அங்கீரத்தைப் பெற்று நாடாளுமன்றில் நிறைவேற்றுவதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.