ஹஸ்பர் ஏ ஹலீம் –
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று (3) மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நடைபெற்றது .
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முதலாவது செயலமர்வு வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கிழக்கு மாகாணத்தில் முதலாவது அமர்வு திருகோணமலையில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயலமர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற ஏற்பாடாகி உள்ளன.
இப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களுடைய பிரச்சினைகள் ,கல்வி ,காணி உட்பட பல விடயங்களை இதன்போது மக்கள் தெரிவித்தார்கள் .இதன் மூலம் இப்பிரதேச மக்கள் படும் வேதனைகளை துன்பங்களை அறியக் கூடியதாக உள்ளதாகவும் அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
அந்நிய ஆட்சி காரணமாக இந்நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. இதன் வடுக்கள் இன்றும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. எனவே அனைத்து மக்களையும் ஒன்றாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் இணைத்து செய்வதற்காகவே இந்த செயலணி உருவாக்கப்பட்டதாகும். இன்று நாட்டில் பல சட்டங்கள் இருப்பது மக்களை ஒன்றினைக்க தடையாகவுள்ளதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார் .
இந்நிகழ்வில் செயலணியின் அங்கத்தவர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட பிரஜைகளும் கலந்து கொண்டனர்.