Breaking
Mon. Nov 25th, 2024

ட்ரம்பின் வெற்றியை அமெரிக்காவின் வெற்றி என  பார்க்கிறேன்.  மக்களின் நலனுக்காக அனைத்து பணிகளையும் என்னால் முடிந்தவரை பொறுப்புடன் செய்து முடித்து, ஆட்சி நிர்வாகத்தை சுமுகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய கடமை என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினார்.

உதவியாளர்கள் எவருமின்றி சுமார் 90 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது நாட்டின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஒபாமாவும், ட்ரம்ப்பும் விவாதித்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, இருவரும் பரஸ்பரம் தங்களது வாழ்த்துக்களையும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

இச் சந்திப்பு குறித்து பராக் ஒபாமா தெரிவிக்கையில்,

இச் சந்திப்பு மிக பிரமாதமாக அமைந்திருந்தது. டிரம்பின் வெற்றியை அமெரிக்காவின் வெற்றி என தாம் பார்ப்பதாகவும், மக்களின் நலனுக்காக அனைத்து பணிகளையும் தம்மால் முடிந்தவரை பொறுப்புடன் செய்து முடித்திருப்பதாகவும், இதனை அமெரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.

உள்நாடு மற்றும் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக டிரம்ப்புடன் ஆலோசித்தேன். மேலும், ஆட்சி நிர்வாகத்தை சுமுகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய கடமை என தெரிவித்தார்.

இதேவேளை, சந்திப்புக் குறித்து ட்ரம்ப் தெரிவிக்கையில்,

மரியாதை நிமித்தமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடனான எனது முதல் சந்திப்பு சுமார் பத்து நிமிடம் நீடிக்கும் என நான் நினைத்திருந்தேன் ஆனால், எதிர்பாராதவிதமாக ஒன்றரை மணிநேரம் வரை எங்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அதிபர் ஒபாமா ஒரு சிறப்புக்குரிய மனிதர். ஒபாமாவை சந்தித்தது எனக்கு கிடைத்த கௌரவம். அவருடன் இருந்தது ஒரு இனிமையான அனுபவம், இனியும் எங்களது சந்திப்புகள் அடிக்கடி தொடர வேண்டும் என விரும்புகிறேன்.

ஜனாதிபதி ஒபாமாவின் ஆலோசனைகளை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், ஆட்சிக்காலத்தின் போது தமக்கு அது பேருதவியாக இருக்கும் என்று  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்பு பற்றி பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, டிரம்பின் மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியுள்ளனர்.

தேர்தலுக்கு முன் இருவரும் கடும் விமர்சனங்கள் செய்து கொண்டாலும், தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் மரியாதை நிமித்தமாக வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார். இதற்கு முன்னர் இருவரும் சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி இடம்பெற்றது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே, அமெரிக்க ஜனாதிபதியாக முடியும். இதில், டிரம்ப், 279 தேர்வு குழு உறுப்பினர்களையும், ஹிலாரி, 218 தேர்வு குழு உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றனர். இதனையடுத்து கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு, ஜனாதிபதி ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே ஒபாமாவின் அழைப்பை ஏற்று வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *