கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஐ.நா. செயலாளர் பான்கீ மூனின் இலங்கை வருகையும், அதன் பின்னால் புதைந்துகிடக்கும் அமெரிக்க அரசியலும்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது )  

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் அவர்கள் எமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அவரது இந்த இலங்கை விஜயமானது முதல் முறையானது அல்ல. இதற்கு முன்பும் எமது நாட்டுக்கு வருகைதந்ததுடன் அவரது பிரதிநிதிகளும், மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்களும் அவசியம் கருதி அவ்வப்போது விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்கள்.

இப்படியான சர்வதேச உயர் பதவிகளில் உள்ளவர்கள் அவசியம் இன்றியும், சுற்றுப் பிரயாணம் மேற்கொள்வது போன்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டதில்லை. மாறாக அரசியல் சூழ்நிலை கருதியும், தேவைக்கு ஏற்பவும் அரசியல் காய்நகர்த்தல்களுக்காகவுமே இவ்வாறான விஜயங்களினை மேற்கொண்டிருந்தார்கள்.

இங்கே ஒரு விடயத்தினை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக தெரிவு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அமெரிக்காவின் பொம்மையாகவும், அதன் நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப கட்டுப்பட்டு நடக்ககூடியவர்களால் மட்டுமே அப்பதவியில் அமர முடியும் என்பதே அதுவாகும்.

விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு உதவிகளைச் செய்வதன் மூலம் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை தனது பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடியும் என்ற பேராசையில் அன்று மகிந்தவின் அரசாங்கத்துக்கு ராஜதந்திர, இராணுவ மற்றும் புலனாய்வு உதவிகளை அமெரிக்கா வழங்கியது. அத்துடன் இறுதிப்போரில் விடுதலைப் புலிகளின் சில பிரிவினர்கள் இரானுவத்தினர்களிடம் சரணடைவதற்கான அத்தனை வழிவகைகளையும் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக அமெரிக்காவே முன்னின்று செய்தது.

அது ஈராக் போரில் சதாம் ஹுசைனின் பல தளபதிகள் அமெரிக்க படையினர்களிடம் சரணடைவதற்கு அமெரிக்கா கையாண்ட தந்திரோபாயத்தினையே இலங்கை விடயத்திலும் அமெரிக்கா கையாண்டது. யுத்தம் ஒன்றில் வீரத்தினையும், திறமையினையும் விட குறுக்குவளிகளின் மூலமாகவே வெற்றி பெற முற்படுவது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பழக்கப்பட்டுப்போன ஒன்றாகும்.

விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தமானது 2௦௦9 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி முள்ளியவாய்க்காளில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களின் மனிதப் படுகொலைகளுடன் முடிவுற்றது.

அத்தனை மனித படுகொலைகளுடன் கூடிய அவலங்கள் ஏற்பட்டிருந்தாலும், யுத்தத்தின் பின்பு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் சீனாவை புறம்தள்ளிவிட்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு இருந்தால் இலங்கை இராணுவத்தினரின் அனைத்து யுத்த குற்றச்செயல்களும் மூடி மறைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அமெரிக்காவை அலட்சியம் செய்துவிட்டு சீன சார்பு கொள்கையில் மகிந்த அரசாங்கம் உறுதியாக இருந்ததனாலும், சீனாவின் ஊடுருவல் இலங்கையில் அதிகரித்து கானப்பட்டதனாலும் மகிந்தவை பணிய வைக்கும் முகமாக இறுதிப்போரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. என்ற யுத்த குற்ற மந்திரத்தினை கையில் எடுத்துக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் முறையீடு செய்தது. அத்துடன் இலங்கைக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவதில் அமெரிக்கா முழு மூச்சுடன் செயற்பட்டது.

இந்த அமெரிக்காவின் செயற்பாடானது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அன்பினாலேயோ, அனுதாபத்தினாலேயோ அல்ல. மாறாக தனது சுயநல அரசியலுக்காகவே. தற்போதைய மைத்ரிபால சிரிசேனா தலைமையிலான இலங்கை அரசாங்கம் சில விடயங்களில் சீன சார்பு கொள்கையினை தொடர்ந்து பேணி வந்தாலும், மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினை போல் முரண்டு புடிக்காமல் மேற்கு நாடுகளுடன் உறவுகளை பேணி வருவதுடன், அவ்வப்போது அமெரிக்காவையும் திருத்திப்படுத்தியே வருகின்றது.

இறுதி யுத்தம் முடிவடைந்து ஓரிரு நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அவர்கள் அவசரமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை யுத்தம் நடைபெற்ற இடங்களுக்குச்சென்று நேரடியாக பார்வையிட்டார். அதன் பின்பு தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இராணுவத்தினர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் அவர் கூறி ஏழு வருடங்கள் கடந்தும் இதுவரையில் எதுவும் நடைபெறவில்லை.

அன்று தனக்கு கட்டுப்படாமல் இலங்கை இருந்ததனால் அதனை பணியவைப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தனது அனைத்து சக்திகளையும் பிரயோகித்து வரிந்துகட்டிக்கொண்டு செயற்பட்டது. ஆனால் இன்றைய அரசியல் சூழல் அப்படியல்ல. இலங்கை தனக்கு சார்பாக செயற்பட ஆரம்பித்ததன் காரணமாக இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மந்தகதியில் செயற்பட்டு வருவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு சார்பாக செடற்பட்டு யுத்தக் குற்றத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய  தேவைகள் அமெரிக்காவுக்கு இருக்கின்றது. அத்துடன் புலம் பெயர்ந்த தமிழ் மக்களையும் திருப்திப்படுத்துவது போல் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.

இதன் காரணமாகவே பான்கீ மூன் அவர்கள் தமிழ் பிரதிநிதிகளை கொழும்பில் வைத்தி சந்திக்காமல் தமிழர்களின் பிரதேசமான வடக்குக்கு சென்று அவர்களது பிரதேசத்திலேயே சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார். இலங்கை வருகின்ற எந்தவொரு வெளிநாட்டு தலைவர்களும் எந்தவொரு சிறுபான்மை இனத்தின் தலைவர்களை கொழும்பில் வைத்து சந்திப்பதே வழக்கமாகும். ஆனால் தமிழர்களின் தலைவர்களை அவர்களது இடங்களுக்கு சென்று சந்திப்பதானது அவர்களது தலையை தடவுவது போன்றதாகும்.

எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்னெடுக்கும் நோக்கில் அதனை துரிதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துவதாகவும் மற்றும் வலி வடக்கில் மீள் குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர்கள் பற்றிய விசாரணை, தமிழ் பிரதேச அபிவிருத்திகள் போன்றவைகள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் தமிழ் மக்களின் கவனத்தினை திசைதிருப்பி இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றுவதற்கான முன் ஏற்பாடுதான் பான்கீ மூனின் இலங்கை வருகையாகும்.

 

Related posts

மஹிந்த அணி கொழும்பில் மந்திர ஆலோசனை! சம்பந்தனுக்கு வரப்போகும் ஆப்பு

wpengine

காத்தான்குடி கடற்கரை மெரின் டிரைவ் வீதியை செப்பனிடும் வேலைத்திட்டம்

wpengine

பேஸ்புக்கு சர்ச்சை! ஏழு முஸ்லிம் இளைஞர்கள் கைது

wpengine