மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் நேற்று (14) மாலை மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பிரதேசச் செயலாளர்கள், உள்ளடங்கலாக உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த கூட்டத்தில் -2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பயிர்ச் செய்கையின் அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டுக்கரை குளத்தில் 7 அடி 8 அங்குலம் நீர் காணப்படுகிறது.
மேலும் சிறிய குளங்களும் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் முதலாவது நீர் விநியோகமானது இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் இறுதி திகதியாக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
இந்த கால போகத்திற்கு 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் போது கால்நடை பராமரிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கால் நடைகளை இம்முறை புல்லறுத்தான் கண்டல், தெருவெளி, தேத்தாவடி போன்ற இடங்களில் கால் நடைகளைப் பட்டி அடைத்துப் பராமரிக்கும் படி கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
குறித்த பகுதிகளில் கால்நடைகளை பராமரிப்பவர்களையும் ஒழுங்குப்படுத்திக் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இம்முறை ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்தல் என்ற சிந்தனையின் அடிப்படையில் இயற்கை பசளையின் மூலம் குறித்த பயிர் செய்கையை முன்னெடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் இயற்கை பசளை உற்பத்தியைப் பெரிய மட்டத்திலும், சிறிய மட்டத்திலும் தனி நபர்களின் வீடுகளிலும் விவசாயிகள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 60 வருடங்களின் பின்னர் முதல் முதலாக விவசாயிகள் இயற்கை பசளை மூலம் விவசாய செய்கையை மேற்கொள்ளுவதாகவும், இது ஒரு சவாலாக அமையும் எனவும், குறித்த சவாலுக்கு முகம் கொடுத்து இயற்கை பசளை மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் போது பசளையைப் பெற்றுக்கொள்ள வங்கிக் கடன் வழங்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் யூரியாவின் சிறிய பகுதியாவது பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன் போது ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கும் பட்சத்தில் மன்னார் மாவட்டத்திலும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் மேலும் தெரிவித்துள்ளார்.