Breaking
Sun. Nov 24th, 2024

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

எம் மத்தியில் சம காலத்தில் வாழ்ந்த  ஆழ்ந்த அறிவுள்ள, திறமை மிக்க, சீரிய புலமைமிக்க ஓர் அறிஞரை நாம் இன்று இழந்து தவிக்கின்றோம் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

கவிஞர் இக்பால் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கவிஞர் ஏ. இக்பல், இலங்கையில் மட்டுமல்ல, தமிழ் கூரும் நல்லுகமும் நன்றாக அவரை அறியும். சென்ற 50 ஆண்டு காலமாக கவிஞர் இக்பாலை நான் நன்கறிவேன். அரசியலில் எதிரும் புதிருமான இடங்களிலே நாங்கள் இருந்தாலும் திறமையை மதிப்பதில் அவருக்கு தனிப்பெருமை உண்டு. எனவேதான் நான் பாராளுமன்றத்திலே எனது வரவு செலவுத் திட்ட விவாத உரைகளை நிகழ்த்தும் போது அடிக்கடி மூன்று மொழிகளிலும் கவி வரிகளைச் சேர்த்துக் கொள்வேன். ‘பட்ஜட் கவிகள்’என்று அதற்கு அவர் பெயர் சூட்டினார். அதன் தொகுப்பு ஒன்றையும் அவர் வேண்டி நின்றார். அதனை நான் அவர் வாழும் பொழுதே அனுப்பி வைத்தேன்.

இஸ்லாமிய சோசலிச முன்னணி அணியில் கவிஞர் ஏ. இக்பாலும் மார்க்ஸிய விரோத எதிரணியில் நானும் ஈடுபட்டு இன்ஸான், உதயம் போன்ற பத்திரிகைளில் எழுதும்போது அவருடைய முற்போக்குக் கருத்துக்களின் சிதறலை நான் என்றும் வியந்ததுண்டு.

தனிப்பட முறையிலும் எழுத்துத்துறையிலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர் கவிஞர் இக்பால். அவருக்கென்று ஒரு தனியான திறமை தகைமை மாத்திரமல்ல எவரையும் விமர்சிக்க வேண்டிய நேரத்தில் தயவுதாட்சண்யமின்றி விமர்சிக்கக்கூடிய அந்தத் தகைமையையும் அவரிடத்தில் நாங்கள் நிறையக் கண்டிருக்கின்றோம். ஆனால் அவர் யாரை விமர்சிக்கின்றாரோ அவர் மீது தனது தனிப்பட்ட கோபதாபங்களைக் காட்ட மாட்டார். அதனை என்னுடைய அனுபவத்தின் மூலமாக அதனை அறிந்து வைத்திருக்கின்றேன்.

81 வருடங்கள் நிறைவு வாழ்வு வாழ்ந்த தமிழ் உலகம் போற்றும் சிறந்த கவித்துறைவாதியாகிய கவிஞர் ஏ. இக்பாலுடைய மறைவையிட்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவருடைய மகள் மலிகா (முன்னாள் ஆளுநர் அலவி மௌலானாவினுடைய அலுவலகத்தில் பணிபுரிந்தவர்) அவருக்கும் அவருடைய குடும்பத்தவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கவிஞருக்கு முன்பே அவருடைய மனைவி காலமாகிவிட்டார். மலிகாவை ஒரே மகளாகக் கொண்டு அவரை வளர்த்தெடுத்தார். அவருடைய உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள், தர்கா நகரைச் சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவருடைய நற்கருமங்களை ஏற்று ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் நுழைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக! என்றும் வேண்டிக் கொள்கின்றேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *