தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 24-09-2016 சனி காலை யாழ் பல்கலைக்கழகத்தின் முன்பாகவும் அதனைதொடர்ந்து நல்லூர் முன்றலிலும் இருந்து இரு பகுதியாக ஆரம்பமான “எழுக தமிழ்” எழுச்சி பேரணியை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
தொடர்ந்து பேரணி மிகுந்த எழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான இன உணர்வாளர்களால் உணர்வுபூர்வமாக நடந்து, இறுதியிலே யாழ்முற்றவெளியில் அமைக்கப்பட்ட “எழுக தமிழ்” அரங்கிலே சுடர் ஏற்றி பேரணியின் பிரகடனத்துடன் தமிழர் பேரவையின் இணைத்தலைவர்களது எழுச்சி உரையுடன் மிகுந்த வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழர் என்ற உயர்ந்த உணர்வோடும், உரிமையோடும் இன்றையதினம் இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியிலே தமது நேரங்களை ஒதுக்கி அரசியல் கட்சிகள் என்ற பேதங்களின்றி, எமது தமிழினம் என்ற சிந்தனையோடும், உணர்வோடும் அலையலையாய் திரண்டு வந்து பேராதரவு தந்த எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றேன்.
நமது இனத்தின் எழுச்சிக்காகவும், நமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவும், தமிழ் பேசும் சமுகங்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காகவும் இடம்பெற்ற இவ் “எழுக தமிழ்” பேரணியை வெற்றிகரமாக நிறைவேற்றி இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் ஒரு சிறந்த செய்தியை எடுத்துக்கூறிய எனது மக்களது பேராதரவுக்கு நன்றி கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் பேரணியில் கலந்துகொண்ட அனைத்து உறவுக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.