எளியவர்களின் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு நசுக்கி வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் தன்னை தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர்களும் பாரதீய ஜனதா கட்சியினரும் தாக்கி வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
”சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் என்னை இன்று சந்தித்தனர். அவர்கள் கடுமையாக அச்சுறுத்தப்படுகின்றனர்” என செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார் ராகுல்.
மக்களை அச்சுறுத்துவதாலும், தாக்குவதாலும் நாட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லை. ஹைதராபாத்தில் ரோஹித் வேமூலாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தில்லியில் கன்னையா குமாரும் நம்முடைய மாணவர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றார் ராகுல்.
யார் எல்லாம் தங்களது உரிமைக்காக போராடுகிறார்களோ அவர்களை எல்லாம் மோடி அரசு நசுக்கிறது. விவசாயிகள், தலித்துகள், மலைவாழ் மக்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட ஆதரவற்றவர்களின் கோரிக்கையை தேசிய ஜனநாய கூட்டணி அரசு ஒடுக்குகிறது. இவர்கள்தான் இந்தியாவின் வலிமை. இவர்களை ஒடுக்குபவர்கள் ஒரு போதும் எவ்வித நன்மையும் பெற முடியாது என்றார் ராகுல்.
கடந்த வாரம் மக்களவையில் பிரதமர் மோடி பேசிய ‘சிலருக்கு வயதாகிவிட்டது ஆனால் அதற்குரிய பக்குவம் இல்லை’ என்பதை குறிப்பிட்ட ராகுல், பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தன் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நாள்தோறும் தொடுத்து வருகின்றனர் என்றார்.
என் மீது எத்தகைய தாக்குதல்களையும் நடத்துங்கள்,எவ்வளவு நேரமானாலும் இழிவாக பேசுங்கள். ஆனால், எளியவர்களை ஒடுக்காதீர்கள் என்றார் ராகுல்.