கட்டுரைகள்பிரதான செய்திகள்

எல்லை நிர்ணயத்தில் ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா

(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

இவ்வரசு, ஏற்கனவே கட்டிய மனைவி ( உள்ளூராட்சி சபை தேர்தல் முறைமை ) “வாழ்” “வாழ்” என, எதனையும் செய்ய விடாது தொந்தரவு செய்துகொண்டிருக்க, திருமணம் பேசி வைத்துள்ள இரண்டாவது தாரம், அதே பாணியில் என தெரிந்தும், கழற்றிவிடாமல் ( மாகாண தேர்தல் முறைமை ), கலியாணம் கட்ட தயாராகி கொண்டிருக்கின்றது. இவர்களின் இச் செயற்பாடுகளானது முஸ்லிம் பிரதிநிதித்துவ குறைப்பை அடிப்படையாக கொண்டுள்ளதா என்ற சந்தேகம் அன்று தொட்டு, இன்று வரை நிலவி வருகிறது. இதில், நான் முஸ்லிம் என்ற வார்த்தையை பிரயோகிக்க, உள்ளூராட்சி சபை வட்டார எல்லை நிர்ணயத்தில், ஒரு சில முஸ்லிம் சபைகளில் கூட, தமிழ் கட்சிகளின் மிகை ஆதிக்கம் இருந்தமையே காரணமாகும். அவர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை, தேவையான வகையில் செய்து கொண்டுள்ளார்கள். தற்போது முன் மொழியப்படுள்ள எல்லை நிர்ணயத்திலும், முஸ்லிம்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எது, எப்படியோ, இவ்வரசு வைக்கப்போகும் சூனியம், நிச்சயம் அவர்கள் தலையையும் காவு கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், இவ் விடயத்தை முஸ்லிம்களாகிய நாம் மிக கவனமாக கையாள்தல் வேண்டும். மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றம் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகாமானது என நன்கு அறிந்தும், எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் அங்கீகாரங்களுடன் தான், அது நிறைவேற்றப்பட்டிருந்தது. அன்று அவர்கள் நினைத்திருந்தால், அதனை நிறைவேற்ற முடியாமல் தடுத்திருக்கலாம். அவர் போனார், நானும் போனேன் என்ற கருத்துக்கள் எல்லாம் வந்திருந்தன. இதுவரை அமைச்சர் ஹக்கீமோ, அது பிழை என ஏற்றுக்கொள்ளவில்லை. சில இடங்களில், அதில் எந்த பாதகங்களுமில்லை என நியாயப்படுத்தியுமிருந்தார். இப்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோர் இந்த துரோகத்தை செய்யமாட்டோம் என குதித்தாலும், இறுதியில் என்ன நடைபெறும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. மாகாண சபை தேர்தல் முறைமை பாதகமானதென நன்கு அறிந்துகொண்டே பிரதி அமைச்சர் ஹரீஸ், அதற்கு ஆதராவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடந்தவைகள் பற்றி பேசி எந்த இலாபங்களுமில்லை. இனி நடக்கப்போகும் விடயங்களை சரியாக கையாளும் வகையிலான பொறிமுறைகள் வகுக்கப்படல் வேண்டும். இவ்வாறான விடயங்களை கையாள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், அதனோடு சேர்ந்த ஒரு சிவில் அமைப்பும் மிகவும் பொருத்தமானதாக கருதுகிறேன். எந்த முஸ்லிமாக இருந்தாலும், முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் என அறிந்து கொண்டு, அதற்கு ஆதரவளிக்க விரும்ப மாட்டான். அப்படி அவர்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால், அதில் சுய இலாபமும், நிர்ப்பந்தமும் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விரு காரணிகளையும் வெற்றிகொள்ள வேண்டுமாக இருந்தால், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், அதனோடு சேர்ந்த ஒரு சிவில் அமைப்புமே பொருத்தமானது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவானது, ஒரு உறுதியான முடிவை எடுத்து, அதன் பிரகாரம் அரசியல் வாதிகளை செயற்படுமாறு உத்தரவிட வேண்டும். அதற்கான தகுதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு இருப்பதாக கருதுகிறேன். இதற்கு எதிராக செயல்படுவோர் முஸ்லிம் சமூகத்தின் துரோகியாக முத்திரை குத்தப்படுவர்.

இன்று எமது அரசியல் வாதிகளுக்கு, இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசுக்கு எதிராக செயற்பட, ஒரு தகுந்த காரணம் தேவை. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்குமாக இருந்தால், அதுவே எமது அரசியல் வாதிகளுக்கான தகுந்த காரணமாக அமையும். அரசிடம் சென்று “ நாங்கள் உங்களை ஆதரித்தால், முஸ்லிம் எங்களை வெறுப்பார்கள்” என கூறி, தப்பித்துக்கொள்ள முடியும். அவர்களும் இக் காரணத்தை ஏற்கவே வேண்டும். எந்த வித பாதிப்புமின்றி, அவர்களும் தங்களது விடயங்களை சாதித்து கொள்வார்கள். ஒரு மதச் செயற்பாட்டை முன்னெடுக்க கூடிய அமைப்பு ( அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா) தனித்து வழி காட்டும் போது, அது வேறு பொருள் கொடுக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவ்வமைப்பை நோக்கி இனவாதிகளின் பார்வையும் திரும்பலாம். இந் நேரத்தில், இவ்வாறான விடயங்களுக்கு சட்ட ரீதியாக வழி காட்டும் ஆற்றல், அதற்கு இருப்பதாகவும் கூற முடியாது. அதற்காகவே, அதனோடு சேர்த்த முஸ்லிம் புத்தி ஜீவிகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு பொருத்தமானதாக கருதுகிறேன். அவர்கள் முடிவு மக்கள் முடிவாக அமையும். இதன் பின்னால் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இருப்பதால், அது அரசியல் வாதிகளுக்கு பாரிய அழுத்தமாக முடியும்.

அப்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்தை வழி காட்ட முடியாதென்றால், அதனை பகிரங்கமாக அறிவித்து, ஒதுங்கி கொள்ள வேண்டும். குனூத் மாத்திரம் ஓத சொல்லி, வழி காட்ட ஒரு அமைப்பு தேவையில்லை. இன்று இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதான வழி காட்டலை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் செய்து வருகிறது. அவர்களை நோக்கியே எமது பார்வையை செலுத்த வேண்டும். வேறு வழி இல்லை. அவர்களின் வழி காட்டல்கள், முஸ்லிம் சமூகத்தை அரசியலில் வழி காட்டுகிறது என்ற செய்தி பேரின மக்களின் காதுகளை எட்டுமாக இருந்தால், சில வேளை அதற்கு பாரிய விலை கொடுக்க நேரிடலாம். இன்று ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மீது பேரின மக்கள் அதிருப்தியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயற்பட வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம் சமூகத்தை அரசியலில் வழி காட்டுமா?

Related posts

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை றிப்கான் நிராகரிப்பு; அவகாசம் கோரல்!

wpengine

மியன்மாரில் தொடரும் கொலை

wpengine

பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டிருக்கும் ஜனாதிபதியின் வாழ்த்து

wpengine