புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கியுள்ளது என்பதை ரவுப் ஹக்கீம் உறுதிப்படுத்துவாரா என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (06) கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகம் சார்ந்து உள்ளடக்கப்பட விடயங்கள் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸினால் எவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்பது தொடர்பில் கட்சியிலுள்ள எந்தவொரு மட்டத்தில் உள்ளவர்கள்களும் அறிந்திருக்கவில்லை.
அவ்வாறான கோரிக்கைகள் ஏதும் கட்சியினால் முன்வைக்கப்பட்டதா என்பதுகூட கட்சியிலுள்ள யாருக்கும் தெரியாத நிலையே இன்று காணப்படுகிறது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதுபற்றி அறியாமையில் இருப்பது தான் இங்கே வேடிக்கையான, கவலைக்குரிய விடயமாகும்.
மு.காவின் கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சியின் எந்தவொரு தீர்மானமும் கட்சியின் உச்சபீடத்தினால் மசூறா அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த விடயம் கட்சியின் உச்சபீடத்திற்கு இதுவரை முன்வைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அதற்கான ஆதரவினை நாட்டு மக்களிடம் கோரி நிற்கின்ற அதிகாரத்தைரவுப் ஹக்கீமிற்கு வழங்கியது யாரென்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடும் சபையாக முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடம் இருக்கின்ற போதிலும் கூட, அடுத்து வரும் பல தசாப்தங்களுக்கு முழு முஸ்லிம் சமூகத்தினதும் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு விடயத்தில், அவ்வாறு ஆமாம் சாமி போடமாட்டார்கள் என்ற பயம் ரவுப் ஹக்கீமிற்கு இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த விடயத்தினை உச்சபீடத்திற்கு முன்வைத்திருக்க மாட்டார்.
அல்லது, இவற்றை வெளியிட்டால் பேரினவாதிகள் எதிர்ப்பார்கள், ‘வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைத்த கதையாக’ ஆகிவிடும் என்ற தனது வழமையான பம்மாத்துப் பதில்களைக் கூறி மக்களை முட்டாளாக்க முயல்வார்.
ஆனால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டு அங்கு இரண்டில் மூன்று பெரும்பான்மையுடன் நிறைவேறி தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டி இருக்கின்ற ஒரு விடயத்தினை அவ்வாறெல்லாம் மூடி மறைத்து நிறைவேற்ற முடியாது என்பதே நிதர்சனமாகும்.
புதிய தேர்தல் முறை, அதிகாரப் பகிர்வு போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்பட உள்ளதாகவும் ரவுப் ஹக்கீம் அந்த நிகழ்வில் பேசும் போது குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று நடைமுறையில் இருக்கின்ற, முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் சாதகமாக விகிதாசார தேர்தல் முறையை மாற்றி, பேரினவாதிகளின் கைப்பொம்மைகளாக நமது முஸ்லிம் பிரதிநிதிகளை ஆக்குகின்ற தொகுதிவாரி தேர்தல் முறையை மீளக் கொண்டுவரவும், தமிழ்த் தேசியத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து,
முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது மீண்டும் ஒருமுறை அடிமைச் சாசனம் எழுதவும் காத்திருக்கின்ற, இந்த நூதனமான பேரினவாத அரசாங்கத்தின் கைப்பாவையாக, நமது விடுதலைக்காக நமது பெருந்தலைவர் அஷ்ரபினால் ஆலமரமாய் வளர்த்தெடுக்கப்பட்ட நமது பேரியக்கத்தின் தலைமை ஆசனத்தில் அமர்ந்து கொண்டு ரவுப் ஹக்கீம் செயல்படுவதை இனியும் முஸ்லிம் சமூகம் அனுமதிக்க முடியாது.
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவினை கோரி நின்ற றஊப் ஹக்கீமிடம், அந்த அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துமாறு, கட்சியின் உச்சபீட உறுப்பினர்களும் போராளிகளும் கேட்கவேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் போன்று, மீண்டுமொரு அடிமைச் சாசனம் நமது முதுகில் எழுதப்பட முடியாது. அதற்கு துணைபோகும் எவரும் எமது முஸ்லிம் சமூகத்துக்கு தலைவனாக இருக்கவும் முடியாது என்பதில் எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் குறிப்பிட்டுள்ளார்.