குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிலையங்கள் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 61 எரிபொருள் நிலையங்கள் லங்கா ஒட்டோ டீசலையும் 50 வீத குறைந்தபட்ச கையிருப்பை நேற்றைய தினம் (29) வரையில் பராமரிக்க தவறியுள்ளதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்க தவறிய பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கடந்த மாதம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
30.07.2023 காலை 8.30 மணி நிலவரப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள எரிபொருள் இருப்பு பின்வருமாறு.
ஒட்டோ டீசல் – 124,690 மெற்றிக் தொன்
சூப்பர் டீசல் – 5,651 மெற்றிக் தொன்
92 ரக பெற்றோல் – 19,903 மெற்றிக் தொன்
95 ரக பெற்றோல் – 4,537 மெற்றிக் தொன்
விமான எரிபொருள் – 26,539 மெற்றிக் தொன் ஆகும்.