(காமிஸ் கலீஸ்)
எமது பிரதேசத்தில் க.பொ.தா. (சா.த) மற்றும் க.பொ.தா. (உ.த) போன்ற பரீட்சைகள் எழுதிய மாணவர்களை இலக்குவைத்து எமது பிரதேசத்தில் இயங்கும் சில அதிகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் டிப்ளோமா மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற சான்றிதல்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் எனும் பெயரில் தமது கல்வி நிறுவனங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்து வருகின்றன.
மேற்படி கல்வி நிறுவனங்கள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவிலோ அல்லது வேறு இலங்கை அரசின் உயர்கல்விசார் சபைகளினாலோ முறையாக அங்கீகரிக்கப்படாமல் இவ்வாறான முன்னெடுப்புக்களில் ஈடுபடுவது பெற்றோர்களும் மாணவர்களும் அறியாத ஒரு விடயமாகும். இந் நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து கல்வி நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கே அதிகளவாக விநியோகிக்கப்படுகின்றன. அத்தோடு இச் சான்றிதழ்கள் வெளி விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்படுவதற்கு எவ்வித தகுதிகளும் அற்றவை என்பதே உண்மையாகும்.
அத்தோடு முறையாக நான்கு தொடக்கம் பன்னிரண்டு மாதங்கள் கற்பிக்கப்படவேண்டிய பாட நெறிகளை ஒன்று தொடக்கம் மூன்று மாதங்களில் கற்பிக்கப்படுவதாகக் கூறி குறித்த மாணவர்கள் அடைய விளையும் தேர்ச்சியினை மிகவும் இலகுவாக சீரழித்தும் விடுகின்றனர்.
எனவே இதன் மூலம் விழிப்படையும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்புற ஆவன செய்ய முடியும்.
கல்வி நிறுவனம் ஒன்று மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளமையினை பரீட்சிக்கும் இணையத்தளம்:http://220.247.221.26/Insreg_ Home/Insreg_Institute_Search. php