நெல்லினை என்ன விலைக்கு கொள்வனவு செய்தாலும், அரிசியினை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வற்கு அரசாங்கம் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் காலகட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை நாம் மீளபெறாது இருந்தோம். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மக்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். 5 மில்லியன் ரூபாய் நிதியில் மினி கோப்சிற்றி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நான் கல்வி அமைச்சராக வந்த பின் கூட்டுறவுச் சங்கம் ஊடாக செயற்யப்பட்ட வேலைகள் சிரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்குரிய வேலைகள் எதுவும் செய்யாமல் எல்லா விடயமும் கிடப்பில் இருந்தது. எதிர்கட்சியினர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களை சரியான முறையில் செயற்படுத்தவில்லை. அவர்கள் தனியார் வர்த்தகர்கள் இயங்குவதற்கான வசதிகளை செய்தார்களே தவிர, பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக நாட்டிற்கு தேவையானவற்றை செய்ய அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தது. எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதிகபடியான வாக்குளால் வெற்றி பெற்ற பின் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையபானவற்றை செய்வதற்கு எதிர்பார்த்திருந்தார். ஜனாதிபதியின் சிந்தனையில் கீழ் மக்களுக்கான பொருட்கள் சேவைகளின் விலையைக் குறைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பது தான நோக்கம். கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டிற்கு தேவையான உற்பத்திகளை செய்யாது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது தான் அவர்களின் நோக்கமாக இருந்தது.
அரிசி, உழுந்து, பயறு உள்ளிட்ட அவசியமான பொருட்கள் இல்லாமல் தேவையில்லாத பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டு இருந்தார்கள். தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், நியாய விலையில் பொருட்களைப் பெற முடியாமலும் மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கினர். ஜனாதிபதியின் முடிவுக்கு ஏற்ப எமது நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய விடயங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஆட்சியாளரும் எடுக்க முடியாத பெரியதொரு விடயத்தை இதன் மூலம் ஜனாதிபதி செய்துள்ளார். மஞ்சள், கௌப்பி, பயறு போன்றன தற்போதும் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் நீங்கள் என்ன விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்தாலும், அரிசி 100 ரூபாய்க்கு மேல் எமது ஆட்சிக் காலத்தில் விற்பனை செய்ய மாட்டோம். 100 ரூபாய்க்குள் தான் அரிசியினை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். நெல்லினை என்ன விலைக்கு என்றாலும் பெறுங்கள். ஆனால் அரிசி 100 ரூபாயக்குள் தான் இருக்க வேண்டும். அரசாங்கம் விவசாயிகளுக்கு நிறைய விடயங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது. மானிய உரம், இலகுவான கடன் திட்டம், அரிசி கட்டுப்பாட்டு விலை என பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அரிசியினை மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
மக்களுக்கு தேவையான 27 பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு இவற்றை இந்த விலைகளில் பெற்றுக் கொள்ள முடியும். சதொச நிறுவனத்தில் 421 கிளைகள் இருக்கிறது. தற்போது சதொசவின் வருமானம் அதிகரித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களும் அதேபோல் செயற்படக் கூடியதாக இருக்கும். அங்கு கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களைப் பெற முடியும். பொருட்களை கொள்வனவு செய்யும் போது இடைத்தரகர்களினால் தான் விலை அதிகரிக்கிறது. பொருட்களை உற்பத்தி செய்பவர்களே விற்பனை செய்வதற்கான இடங்களை அமைத்துக் கொடுத்தால் இலாபத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அனுராதபுரம், மிகிந்தலை போன்ற இடங்களில் அவ்வாறான நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி பெற உள்ளோம். ரஜவாசல என்ற பெயரில் எல்லா அரச நிறுவனங்களையும் ஒன்றுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் இலகுவாக ஒரு இடத்திலேயே பொருட்களைப் பெற முடியும். ரஜவாசல என்ற திட்டத்தை வவுனியா மாவட்டத்திற்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.