என்னையும் எமது தரப்பையும் தண்டிக்கவே புதிய நீதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எவ்வாறு செயற்படப்போகின்றார் என்பது குறித்து வேடிக்கை பார்க்கின்றோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
என்னை குற்றவாளி என கூறிக்கொண்டு உண்மையான குற்றவாளிகள் நல்லாட்சிக்குள் ஒளிந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஸ்ணு ஆலயத்திற்கு தரிசனம் பெற சென்றிருந்தார். வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தில் இதுவரை காலம் கடமையாற்றிய நீதி அமைச்சர் மாற்றப்பட்டு இப்போது புதிய நீதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எவ்வாறு செயற்படுகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஏனெனில் என்னையும் எனது தரப்பையும் தண்டிக்கவே இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். எமக்கு எதிராக செயற்படவில்லை, சட்டதரணிகள் சங்கத்தின் சுயாதீனதில் தலையிடவில்லை, நீதி மன்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றங்களுகாகத்தானே நீதி அமைச்சரை நீக்கினார்கள்.
ஆகவே இவர் புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில் எவ்வாறு செயற்படப்போகின்றார் என்பது குறித்து நாம் வேடிக்கை பார்த்து வருகின்றோம். இவரை நியமித்துள்ளமை எம்மை தண்டிக்கவென்பது எமக்கு தெரியும். ஆகவே அவர் எவ்வாறு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகின்றார் என்பது குறித்து நாம் அவதானித்து வருகின்றோம்.
விஜயதாச ராஜபக்ஷவையும் பழிவாங்கிவிட்டனர். அதேபோல் மேலும் பலர் பழிவாங்கப்படுவார்கள். இதன் மத்தியில் எமக்கெதிரான செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது, எம்மை தண்டிப்பர்களா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எம்மை குறைகூறுவதை விடுத்தால் இந்த அரசாங்கம் வேறு எதையும் இதுவரை செய்ததில்லை. எல்லா செயற்பாடுகளுக்கும் எனது பெயர் இந்த அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது. எம்முடன் இருந்து அரசியல் செய்தவர்கள் இன்று மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
நான் எனது அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளை செய்தேன் என்றால் எனது ஆட்சியில் நிரந்தரமாக அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் முதலில் அனைத்திற்கும் பொறுப்புக் கூறவேண்டும். இன்று நல்லாட்சியில் இருக்கும் அதிகமான நபர்களை முதலில் தண்டிக்க வேண்டும். மாறாக அவர்கள் தப்பித்துகொள்ள எனது பெயரை பயன்படுத்துவது வேடிக்கையான விடயமாகும் என்றார்.