Breaking
Mon. Nov 25th, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்கைப் பெறப் போவதில்லை. சிறுபான்மை மக்களின் வாக்கே ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப் போவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


இந்நிலையைில் முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதை வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்தி அவருக்கு ஒட்டுமொத்தமாக தமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும். இரண்டாவது வாக்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் செயற்படக்கூடிய பிரதான வேட்பாளருக்கு வழங்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கையே சமகால அரசியல் போக்கில் முஸ்லிம்களுக்கு சிறந்த பெறுபேற்றைத் தரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிக முக்கிய வகிபாகம் பெறுகின்றன.

எனவே, முஸ்லிம் மக்கள் தமது
ஒட்டுமொத்தமான 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை எவ்வாறு அளிக்கப் போகின்றார்கள் என்பது முக்கியமானது. இந்தப் பொறுப்பை சரிவர உணர்ந்து தமது
பங்களிப்பைச் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. எனவே, எமக்கான ஒரு வேட்பாளரை நாம் களம் இறக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்
ஹக்கீம் இதில் களமிறங்குவாரானால் அதுவும் சிறப்பானதே.

கடந்த காலங்களில் நம்பிக்கை நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள், உத்தரவாதங்கள், ஒன்றிணைந்த பங்களிப்புகள் அனைத்தும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பாதகங்களையும் ஏமாற்றங்களையுமே ஏற்படுத்தின. சமூகத்துக்கு நம்மையளிக்கும் விடயங்கள் எதுவுமே நடக்கவில்லை.

ஒரு இஞ்சி காணியைக் கூட விடுவிக்க முடியாத நிலையும் சாதாரண சின்ன அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையுமே காணப்பட்டது.

இனியும் அதன் வழிநடப்பதற்கு நாம் முயற்சிக்கக்கூடாது. முஸ்லிம்கள் கோழைகள் அல்லர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் நாம் எமது அரசில் பாதையை வகுக்க வேண்டும்.

சமூகத்தின் தலைவிதியை எந்தச் சமூகமும் நிர்ணயிக்காத வரை அல்லாஹ் அதை மாற்றமாட்டான்” என்கிறது குர்ஆன். இதற்கான சந்தர்ப்பமாகவே இம்முறை ஜனாதிபதித்
தேர்தல் அமைந்துள்ளது.

எமது அபிலாஷைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைச் சரிவரப் புரிந்து கொண்டு – ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உறுதியான முறையில் உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு நாம் ஆதரவளிப்பது முக்கியமானது. எமது ஒட்டுமொத்த – ஒன்றித்த சக்தி எத்தகையது என்பதை நாம் காட்ட வேண்டியதும் அவசியம்.

எனவே, ஜனாதிபதி வேட்பாளரான முஸ்லிமுக்கு எமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும். பின்னர் எமது கோரிக்கைளை ஏற்றுக்கொண்ட வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை அளிக்க வேண்டும். காரணம் முஸ்லிம் வேட்பாளர் பெற்றுக்கொண்ட அத்தனை வாக்குகளும் மற்றைய வேட்பாளருக்கும் கிடைக்கப் பெற்றதையும் இந்த வாக்குகள் மூலமாகத்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதையும் உறுதிசெய்ய வேண்டியதும் அவசிமானது.

இந்த முக்கியத்துவத்தில் எமது வகிபாகம் எத்தனை சக்திமிக்கது என்பதை எடுத்தியம்பவே முஸ்லிம் தமக்கான ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தமது ஒட்டுமொத்த வாக்குகளை முதலில் அளித்து தமது சத்தியை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *