எதிர்க்கட்சி அலுவலகத்திலிருந்து சமகால எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெளியேறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் ஏற்றுக் கொண்ட போதிலும், இதுவரையில் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செயற்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கருத்து வெளியிட்டார்.
“இந்த வாரத்தின் ஆரம்பித்தில் எதிர்க்கட்சி தலைவரை சபாநாயகர் அறிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் தீர்மானம் என்பது கட்சி தலைவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் சபாநாயகர் அதனை செய்யாமல் நாடாளுமன்றத்தில் அறிவித்தமை எங்களுக்கு சிறு வருத்தம். எதிர்வரும் வாரத்தில் நாங்கள் எதிர்க்கட்சி அலுவலகத்தை மஹிந்தவுக்கு ஒப்படைத்து விடுவோம்.
எப்படியிருப்பினும் எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயாதீன எதிர்க்கட்சியாக செயற்படும்.
நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் ரணிலுக்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம். அதற்காக அரசாங்கத்துடன் இணையவில்லை. மஹிந்த எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் இல்லை என்றாலும் நாங்கள் தனியாக தான் செயற்படுவோம்.
மஹிந்தவுக்கும் ஆதரவு வழங்க மாட்டோம். மக்கள் விடுதலை முன்னணி போன்று நாங்களும் சுயாதீனமாக செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பு கொடுத்து ஜனநாயக ரீதியாக செயற்படுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.