தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டுக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (06) பண்டுவஸ்நுவர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதலாவது அரசமுறை விஜயமாக அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு சென்றிருந்தார்.இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு சார்பாக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
அன்று தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றனர்.ஆனால் எமது அரசாங்கத்துக்கே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதேபோன்று எமது அயல் நாட்டின் தலைவர் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு சென்றுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுக்கிறார்கள்.
அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை. அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில் விக்கிரமசிங்க மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தார். ஆனால் நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
நட்டத்தில் இயங்குவதாக கூறப்பட்ட மில்கோ நிறுவனம் தற்போது இலாபமிட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. திரிபோஷா நிறுவனம் விற்பனை செய்யப்படவிருந்தது. ஆனால் தற்போது திரிபோஷ உற்பத்தியை மேற்கொண்டு அதனை இலாபமிட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். இதுவே எமது முயற்சியாகும்.
அதேபோன்று மஹவ- ஓமந்தை புகையிரத பாதை மற்றும் மஹவ-அநுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய பிரதமர் இந்த திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாக குறிப்பிட்டார்.
அதேபோன்று இந்தியாவிடமிருந்து நாம் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளோம்.தற்போது இந்த கடனுக்கான வட்டியை குறைப்பதாக பிரதமர் எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து நாம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார்.