எதிர்க்கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வது மாத்திரமே நோக்கம் நாம் அபிவிருத்தியை நோக்கியே பயணிக்கிறோம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையை அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அந்த சவாலை ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இன்று வரை எமது அமைச்சினால் 2.5 பில்லியன் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எதிர்கால சந்ததிக்காக நல்லதொரு நாட்டினை உருவாக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். அதற்காக அவர் 2048 ஆகும்போது நாட்டை வெற்றிகொள்வார்.
இவற்றை நமக்காகவே செய்கிறார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக காணப்பட்ட நிலைமையை தலைகீழாக மாற்றியவரும் அவரேயாவார்.
எதிர்க்கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வது மாத்திரமே நோக்கமாக இருந்தாலும் அடுத்த சந்ததிக்கான அபிவிருத்தி அடைந்த நாட்டினை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
ஐக்கிய தேசிய கட்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது. அதனால் அடுத்த 5 வருடங்களுக்குள் இந்நாட்டவர் அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்.’ எனத் தெரிவித்தார்.