(எம்.ஏ.றமீஸ்)
நாம் தலைமைப் பதவிக்கு என்றும்; ஆசைப்பட்டவர்களல்லர். எமக்கு கட்சி என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் எமக்கு தேவையானது சமூகத்தின் நலனை மையப்படுத்திய விடயங்களே. நமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற ஆபத்தினை தடுப்பதற்காக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் தலைமையினை முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலிக்கு வழங்கியதிலிருந்து நாம் சமூகத்திற்கு நல்லதொரு செய்தியினை சொல்லியிருக்கின்றோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நமது முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் எவரும் செய்திராத மொத்த விற்பனை வேலையினை தற்போதைய முஸ்லிம் தலைமையொன்று செய்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் தலைகளை எண்ணி ஆட்சியாளர்களிடம் அத்தலைமை மொத்த வியாபாரம் நடத்தி அதற்கான இலாபத்தினை தனது பைகளில் சேமித்து வைத்திருக்கின்றது.
எம்மீது சில விரோத சக்திகள் வில்பத்து காட்டுக்குள் கிடக்கின்ற மதம் பிடித்த யானைகள்போல் எமக்கெதிராக ஆர்ப்பாட்டங்களையும் நீதி மன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், எமது பிரதேசத்தில் உள்ள நமது முஸ்லிம் சமூகத்தின் ஒரு இஞ்சி நிலத்தினைக்கூட விட்டுக் கொடுக்காமல் போராடி வருகின்றறேன்.
முஸ்லிம் சமூகத்தினை பணத்திற்காக விற்று வருகின்ற செயற்பாட்டினை இந்த நாட்டில் இருந்த எந்த ஒரு முஸ்லிம் தலைமைகளும் செய்திராத வேலையினை தற்போதைய முஸ்லிம் கட்சியின் தலைமையொன்று பகிரங்கமாக செய்து வருகின்றது இதனை எண்ணி நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.
நமது முஸ்லிம் சமூகத்தின் பெருமையினையும் நமது மக்களின் வாக்குப் பலத்தினால் நாட்டின் உயரிய பதவி கொண்ட ஜனாதிபதியினை உருவாக்கும் செயற்பாட்டினை மறைந்த பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பேரம்பேசும் சக்தி கொண்டு சில முறை எமக்கு காண்பித்திருக்கின்றார்.
ஆனால், இன்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமை நமது மக்களின் பெறுமதியினையும் வாக்குகளின் பெறுமதியினையும் இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். நமது சமூகத்தினை மயக்கத்தில் வைத்திருக்கின்றார். சமூகத்தின் பெயரிலான கட்சியினை வைத்துக் கொண்டு ஆட்சியாளர்களிடம் நமது சமூகத்தினை அடகு வைத்து விட்டு பெருந்தொகைப் பணத்தினை ஆட்சியாளர்களிடமிருந்து பெற்று எமது பெருமைகள் எல்லாவெற்றையும் குழி தோண்டிப் புதைத்து வருகின்றது.
வடக்கு, கிழக்கு இணைப்பு, முஸ்லிம் சமூகத்தின் இருப்பினை இல்லாதொழிக்கும் தீர்வுத் திட்டத்திற்கான ஆதரவு, நமது மக்களின் காணிகளை தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாடு என்று பல்வேறான விடயங்களை அந்த முஸ்லிம் தலைமை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்து வருகின்றது.
சமூகத்தினை விற்று பெற்றுக் கொண்டு வரும் பணத்தினை தற்போது நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போதைய மு.கா அள்ளி வீசி வாக்குகளை சூறையாடும் நடவடிக்கைகளில் சூட்சுமமாக ஈடுபட்டு வருகின்றது. அவர்கள் கொண்டு வரும் பணத்தினை நமது மக்கள் பெற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்ட வேண்டாம்.
அந்தப் பணத்தினை தாராளமாக பெற்றுக் கொள்ள வேண்டும் ஏனெனில் அந்தப் பணமெல்லாம் நம்மை விற்றுப் பெறப்பட்டதாகும். ஆப்பணத்தினை யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்கள்போல் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வாக்குகளை மாத்திரம் அவர்களுக்கு அளிக்க வேண்டாம். அவ்வாறு அவர்களுக்குச் செல்லும் வாக்கு ஒவ்வொன்றும் மீண்டும் எமது சமூகத்தினை விற்பதற்கான அங்கீகாரமாக அமையவுள்ளது.
எதிர்கால சந்ததியின் சுதந்திரத்திற்கும், நமது மண்ணின் புனிதத்தினைப் பேணி அதனை மீட்பதற்கும், நமது சமூகத்தின் உரிமையினை வென்றெடுப்பதற்குமாக நாம் புனிதப் பயணமொன்றில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த புனிதப் பயணத்தில் அனைவரும் ஒற்றுமைப்பட முன்வர வேண்டும் என்றார்.