Breaking
Mon. Nov 25th, 2024

தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்று(06) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்,

இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும்.

அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் வட மேல் மாகாண முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று.

ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார். இதற்கு தகுதி அல்ல முக்கியம், ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

அது போலதான் வடக்கு கல்வி அமைச்சரும் அவர் ஆசிரியராக, அதிபராக, வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்வி அமைச்சராக வந்தவர் என்பது முக்கியமல்ல அவரது ஆளுமைதான் முக்கியமானது.

வடக்கின் கல்வித்துறையில் வளங்கள் சரியாக பகிரப்படாமை, சரியாக பயன்படுத்தப்படாமை, மற்றும் நெறிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் கல்வித்துறை என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஆசிரியர் வளங்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் வளங்கள் சரியாக முறையாக பங்கிடப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வலயங்களில் கல்வித்துறையின் ஆளணி வளம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறியும் அது சீர்செய்யப்படவில்லை.

அதற்கு மேலதிகமாக இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்காகதான் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள் குறிப்பாக வன்னி பிரதேசங்களில் நியமிக்கவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

குறிப்பாக 400 பேரளவில் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நியமிக்கப்பட்டார்கள் அதில் ஐம்பது பேர் இடமாறுதல் மூலம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

ஆனால் 75 பேர் அரசியல்வாதிகளின் சிபாரிசு மற்றும் உயர்மட்ட செல்வாகின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்திற்கு வந்துவிட்டார்கள் இதில் எந்தெந்த அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் என்னிடம் உண்டு.

வடக்கிலும் முதலமைச்சர் அமைச்சர்கள் அவர்களுக்குச் சம்பளங்கள் சலுகைகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுக்கு சம்பளம் என வழங்கி வருவது ஏன் மக்களுக்கு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆனால் அது எதுவும் நடந்ததாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *