பிரதான செய்திகள்

எங்களுடைய உரிமையை பெறுவதற்கு இன்றிருக்கின்ற ஒரேயொரு விடயம்தான், மாகாணசபை முறை மட்டும்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முதலமைச்சராகயிருந்தபோது மாகாணசபையின் அதிகாரத்தினை பறித்துக்கொண்டு சென்று பசில் ராஜபக்ஸவிடம் வழங்கிய சேவை மட்டுமே செய்துள்ளதாகவும் வேறு எதனையும் செய்யவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொது மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபொழுது பல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆசையுடன் தான் தேர்தலில் களமிறங்கியிருந்தேன். என்னுடைய செயற்பாடுகள் சரியாக இருக்குமென நம்பி மக்கள் எனக்கு வாக்களித்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் எனவும் ஆளுங்கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் அவர்கள் தெரிவு செய்யப்படவேண்டுமென்றும், அப்போது தான் எங்களுடைய அரசியலை சரியாக கொண்டு செல்ல முடியும் எனவும் வழமையாக சொல்வார்கள். உதாரணமாக வடக்கில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆளுங்கட்சியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலும் இருப்பதால்தான் அங்கு அபிவிருத்திகள் நடக்கின்றன என்றும் சொல்வார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதனை செய்திருக்கின்றார்கள். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்த் தேசியத்திற்காகவும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அபிவிருத்திக்காகவும் தெரிவு செய்திருந்தார்கள்.

ஆனால் அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களுடைய அபிவிருத்தியை விடுத்து தங்களுடைய அபிவிருத்தியைத்தான் குறி வைத்து செயற்படுகின்றார்கள் என்பதை நான் பகிரங்கமாக நாடாளுமன்றத்திலும் கூறியிருக்கின்றேன்.

இம் மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அரசோடு இணைந்து நீங்கள் மக்களுக்கு சேவையாற்ற வந்தீர்களா அல்லது உங்களுடைய தனிப்பட்ட இலாபங்களுக்காக வந்தீர்களா என்பதை பார்க்க வேண்டும்.

எங்கள் பிரதேசங்களில் இருக்கின்ற எல்லா பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்றது. குறிப்பாக படுவான்கரை பகுதியிலுள்ள பாடசாலைகளில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், தமிழ் ஆகிய மூன்று பாடங்களையும் ஒரே ஆசிரியர்தான் கற்பிக்கின்ற நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலை இருக்கின்றபோது ஆயிரம் தேசியப் பாடசாலை என்று ஒரு போலியான நாடகத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயமானது ஐம்பது வருடங்களாக ஒரு தேசியப் பாடசாலையாக இருந்து வருகின்றது. மூன்றாம் மாடியிலே வெளவால்களின் தொல்லை காரணமாக அங்கு மாணவர்கள் கற்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. அக்கூரையை திருத்துவதற்கு கல்வி அமைச்சிடம் கோரியபோது நிதியில்லையென்று சொல்கின்றனர். களுதாவளை மத்திய மகாவித்தியாலயமானது இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தேசியப் பாடசாலையாக மாற்றப்பட்டது.

ஆனால் இதுவரை அங்கு ஆசிரியர்களைத் தவிர ஏனைய எந்த ஊழியர்களும் நிதியில்லாத காரணமாக அங்கு நியமிக்கப்படவில்லை. வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலிருக்கின்ற சில பெற்றோர்கள் சில முறைப்பாடுகளை செய்கின்றனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தான் படித்த பாடசாலையை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்துவதாக கூறிக்கொண்டு காலங்காலமாக சிறந்த கல்வியினை வழங்கி வந்த வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலிருந்து ஆசிரியர்களை தான் படித்த பாடசாலைக்கு இடமாற்றும் திட்டமொன்றை ஆரம்பித்திருக்கின்றார்.

கல்வி வளர்ச்சி என்றால் கூடியளவான ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்க வேண்டும். அதை விடுத்து மாகாணசபை முறைமையினை பலவீனமாக்குகின்ற அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அமைய மாகாணசபைக்கு கொடுக்கப்பட்ட கல்வி அதிகாரத்தை பறிக்கின்ற செயற்பாடே ஆயிரம் பாடசாலை திட்டமாகும்.

எங்களுடைய உரிமையை பெறுவதற்கு இன்றிருக்கின்ற ஒரேயொரு விடயம்தான், இந்த மாகாணசபை முறையாகும். அதற்கு தரப்பட்ட கல்வி அதிகாரத்தை பறிக்கின்ற செயற்பாடுதான் இந்த ஆயிரம் பாடசாலை திட்டமாகும்.

இதனால் கல்வி வளர்ச்சி ஏற்படப்போவதில்லை. மேலதிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படப்போவதில்லை. இன்று இருக்கின்ற பாடசாலைகளில் அமர்ந்திருப்பதற்கு கதிரைகள் இல்லாத நிலையிருக்கின்றது.

இருக்கின்ற தேசியப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலையிருக்கின்றது. அப்படியிருக்கின்றபோது புதிதாக தேசியப் பாடசாலைகளை உருவாக்கி கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பார்த்தேன். 13ஆவது திருத்த சட்டத்தினூடாக வருகின்ற மாகாணசபை முன்னெடுப்பானது சிறந்தது எனவும் நாங்களும் முதலமைச்சராக இருந்தபோது பல விடயங்களை செய்திருந்தோம் எனவும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் செய்தது என்ன? மாகாணசபையிலிருந்த அதிகாரத்தை பசில் ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பறித்துக் கொடுத்ததாகும். சமுர்த்தி என்கின்ற திட்டமானது மாகாணசபையிலிருந்த ஒரு திட்டமாகும்.

அது திவிநெகும என்ற திட்டத்தினூடாக பசில் ராஜபக்ச வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று யாருக்கு சமுர்த்தி வழங்கப்படவேண்டும் என்பதை கொழும்பிலிருந்து தீர்மானிக்கின்றனர். கிராமத்திலே மாடிவீடு வைத்திருப்பவர்களுக்கெல்லாம் சமுர்த்தி இருக்கின்றது.

மத்தியகிழக்கு நாட்டிற்கு தொழிலுக்கு செல்லும் இளைஞரின் குடும்பத்திற்கு மகன் வெளிநாட்டில் இருக்கின்ற காரணத்திற்காக சமுர்த்தி வெட்டப்படுகின்றது. அவன் இங்கு கஷ்டம் என்பதற்காகவே அங்கு செல்கின்றான். கனடா, அவுஸ்திரேலியா, அமேரிக்காவில் மகன் இருக்கின்ற குடும்பங்களுக்கு சமுர்த்தியை வெட்டினால் பிரச்சினையில்லை. ஏனென்றால் அவர் அங்கு கூடுதலான வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

ஆனால் பணக்கஷ்டம் காரணமாக மத்திய கிழக்கு நாட்டிற்கு செல்லும் இளைஞனின் தாய்க்கு சமுர்த்தி வெட்டப்படுகின்றது. மாகாணசபைக்கு இங்த அதிகாரம் இருந்திருந்தால் அது தவறு என்று நாங்கள் சொல்லியிருக்க முடியும். ஆனால் கொழும்பிலிருந்து தீர்மானம் எடுக்கப்படுகின்றது. இதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சராவார் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை பிரதி தவிசாளர் ரஞ்சனி கனகராசா, நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வி.மதிமேனன், அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.   

Related posts

ரணில், மைத்திரி அரசுக்கு எதிராக மன்னார் தொடக்கம் ஆர்ப்பாட்டம்

wpengine

SLTJ அப்துல் றாசிக் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

பலத்த மழை காரணமாக 57 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன: 251 பேர் பாதிப்பு

wpengine