கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு,
ஊழல்கள் பற்றிய விசாரணை
மேற்படி விடயம் தொடர்பாக, தங்களின் 02.08.2017 ம் திகதியிடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றது, அது தொடர்பான பூரண விளக்கத்தை பின்வருமாறு தங்களின் மேலான பார்வைக்கு தாழ்மையுடன் முன்வைக்கின்றேன்.
கடந்த வருடம் முற்பகுதியில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்களினால் கௌரவ முன்னாள் விவசாய அமைச்சருக்கு எதிராக ஊழல் மோசடி தொடர்பான முறைப்பாடு முன்வைக்கப்பட்டதும், அதன் பின்னர் கௌரவ முதலமைச்சர் ஆகிய தாங்கள் ஏனைய நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் எழுத்து மூலமான முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதன் உண்மைத்தன்மையினை கண்டறிய விசாரணைக்குழு நியமிக்கப்போவதாகவும் மாகாண சபையில் அறிவித்திருந்தீர்கள்.
அவ்வேளையிலேயே விசாரணைக் குழுவை விரைவாக நியமிக்குமாறும், இத்தனை இழப்புகளுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற மாகாணசபையில் ஊழல் இருக்கக்கூடாது எனவும், அவ்வாறு எவராவது செயற்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அச்சந்தர்ப்பத்திலேயே ஆணித்தரமாக தெரிவித்திருந்தேன். இதனை தாங்களும் நன்கு அறிவீர்கள் என நம்புவதோடு அதற்கான ஆதாரங்கள் மாகாணசபையின் கண்சாட்டிலும் உள்ளது என்பதனை தெரிவித்து நிற்கின்றேன்.
மேலும் தங்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரைகளின்படி தாங்கள் செயற்படாமல், இரு அமைச்சர்களை ஒரு மாத கட்டாய விடுமுறையில் செல்லுமாறு தாங்கள் தெரிவித்திருந்தமையே இத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படைக்காரணமாக அமைந்துள்ளது, என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வட மாகாண சபையில் கடந்த 14.06.2017 இல் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் பின்னர் தங்களுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஐயா அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஒருமாத கட்டாய விடுமுறை கைவாங்கப்பட்டதை தொடர்ந்து தங்களுக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கைவாங்கப்பட்டதென்பதை தாங்களும் நன்கு அறிவீர்கள். இதன் பின்னர் தங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர கருத்துப் பரிமாற்றத்தின்போது, இரு அமைச்சர்களுக்கு எதிராகவும் தேவை ஏற்படின் புதிய விசாரணைகளையும் மேற்கொள்வதற்கு சுயாதீனமானதும் சட்டரீதியானதுமான விசாரணைக் குழுவை நியமிப்பதென்றும், அதற்கு இரு அமைச்சர்களும் தங்களது ஒத்துழைப்பை வழங்கவேன்டுமென்பதும் கருத்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும், எனவே எச்சந்தர்ப்பத்திலும் சட்டரீதியானதும் சுயாதீனமானதுமான விசாரணைக்குழு முன் தோன்றுவதற்கு ஒரு துளியேனும் தயங்கப்போவதில்லை என்பதுடன், அவ்வாறு விசாரணையின்போது நிதிமோசடிகள் உறுதிப்படுத்தப்படுமெனில் அதனை இரண்டு மடங்காக திருப்பித்தருவதற்கும் தயாராகவுள்ளேன் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் 2013 ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் தங்களினால் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பானது இன்றுவரை எந்தவித களங்கமும், மோசடியுமின்றி தங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் எமது மக்களுக்கு விசுவாசமாகவும் பேணிப்பாதுகாத்து வருகின்றேன் என்பதனை தங்களுக்கு தெரிவித்து நிற்கின்றேன். மேலும் எனது அமைச்சு சார்ந்த வேலைத்திட்டங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இன, மத, மொழி வேறுபாடின்றி முழுவீச்சோடு நடைபெற்று வருகின்றதென்பதனையும் தாங்கள் நன்கு அறிவீர்களென நம்புகின்றேன்.
மேலும் எவரேனும் என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தங்களிடம் ஏதாவது கூறியிருந்தால், அதன் உண்மைத்தன்மையை கண்டறிய தாங்கள் விரும்பினால், எச்சந்தர்ப்பத்திலும் அதனை தெளிவுபடுத்துவதற்கும் தயாராக உள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து நிற்கின்றேன்.
நன்றி.
இப்படிக்கு,
(ஒப்பம்)
பா.டெனிஸ்வரன்
அமைச்சர், மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி,
வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி,
மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சு, வட மாகாணம்.
பிரதி –1. கௌரவ இரா.சம்மந்தன், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்.2. கௌரவ மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர், தலைவர், இலங்கை தமிழ் அரசுக்கட்சி.3. கௌரவ செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர், குழுக்களின் பிரதித்தலைவர், தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம் (TELO).4. திரு.என்.ஸ்ரீகாந்தா, செயலாளர் நாயகம், தமிழீழ விடுதலை இயக்கம் (TELO).