மக்களை கொல்லாமல் கொல்லும் அதிகமான வரி கொள்கைக்கு பதிலாக நாட்டில் நடந்த ஊழல், மோசடிகள் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்தி, கொள்ளையிடப்பட்ட பணத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அதிகமான வரி சுமை காரணமாக மக்கள் மூச்சு விட முடியாது கொல்லாமல் கொல்லும் நிலைமை ஏற்படும். வரியை தவிர வருமானத்தை தேடும் மாற்று வழியில்லை என அரசாங்கம் கூறி வருகிறது.
மக்களை தொடர்ந்தும் வரி சுமையால் வதைக்காது மக்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தை மீண்டும் திறைசேரிக்கு பெற்றுக்கொள்வது போன்ற வருமானம் பெறக்கூடிய முறை சம்பந்தமாக அரசாங்கம் ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டும்.
79 டொலர்களுக்கு கொள்வனவு செய்யக்கூடிய ஒரு மெற்றி தொன் நிலக்கரியை ஒரு மெற்றி தொன் 284 டொலர் என்ற விலையில் 63 லட்சம் மெற்றி தொன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் புதிய களனி பாலம் மற்றும் அத்துருகிரிய இடையிலான அதிவேக நெடுஞ்சாலை சம்பந்தமாக மோசடியான கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளதாகவும் அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை சம்பந்தமாக மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்தி, கொள்ளையிடப்பட்ட பணத்தை மீண்டும் மக்களிடம் வழங்க வேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.