Breaking
Sun. Nov 24th, 2024

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் போதைப் பாவனைக்கு மூவாயிரத்து அறுநூறு மில்லியன் ரூபாய் தொகையினை மக்கள் செலவழித்துள்ளனர் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையம் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஒரு நாளைக்கு ஆறு நூறு ரூபாய்க்கு உழைத்தால் அதில் நானூறு ரூபாய்க்கு மது அருந்தும் பழக்கத்தில் உள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் போதைப் பாவனைக்கு மக்கள் செலவழித்த தொகை 3600 மில்லியன் ரூபாய்கள். அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு தந்த தொகை 3200 மில்லியன் ரூபாய் 400 மில்லியன் ரூபாய் அதிகமாக கொடுத்து குடி போதைக்கு செலவழித்துள்ளோம்.

இதில் மாற்றம் வந்து சேமிக்கும் பழக்கம் உருவாகி உங்களது பிள்ளைகளை நன்றாக கல்வி கற்பிக்க வேண்டும். நாங்கள் மரணிக்கும் போது எங்களது பிள்ளைகள் நல்ல பெயர் சொல்கின்றவர்களாக வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்த தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற படியால் தான் ஊத்துச்சேனை கிராமத்திற்கு ஒரு அமைச்சர் வந்திருக்கின்றார். கடந்த காலங்களில் இப்பிரதேசத்திற்கு அமைச்சர் வந்திருந்தாரா என்று எனக்கு தெரியாது.

இந்த நல்லாட்சி எங்களை அனுப்பியுள்ளது இப்பிரதேச மக்களின் குறைபாடுகள் என்ன என்பதை கண்டறிந்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நல்லாட்சி எங்களை அனுப்பியுள்ளது.

நாயும் கறிச்சட்டியுமாக இருந்த இரண்டு கட்சிகள் இன்று ஒற்றுமைப்பட்டு இந்த அரசியலை இந்த நாட்டின் நன்மைக்காக செய்ய முடியும் என்று சொன்னால் ஏன் நாங்கள் ஒற்றுமைப்பட முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் ஏன் ஒற்றுமைப்பட்டு செயற்பட முடியாதென்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.

இந்த நல்லாட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறுபான்மை சமூகமான தமிழ் மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. அவ்வாறு செய்ய வேண்டுமென்று சொன்னால் கடந்த காலத்திலே ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ஷ நல்லாட்சியை வீழ்த்திக் காட்டுவேன் என்று சொல்லிக் கொண்டே அவர் 2020 வருடம் வரையும் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்.

ஏன் என்றால் இவரால் இதை வீழ்த்த முடியாது. பாராளுமன்றத்தில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் பலம் உள்ள கட்சியான மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட கட்சியாக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மகிந்த விரும்புவது போன்று ஒரு இரவிலோ அல்லது பகலிலோ மாற்றி விட முடியாது. இது சட்டத்தின் பிரகாரம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு. ஒரு அரசியலமைப்பு சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒரு நாட்டிலே இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த நல்லாட்சியை கொண்டு வந்திருக்கின்றது.

2020ம் ஆண்டு வரையும் மகிந்தவால் மாத்திரம் அல்ல வேறு யாராலும் அசைக்கவே முடியாது. எனவே அவர்கள் காட்டுகின்ற பூச்சாண்டிகள் அவர்கள் சொல்லும் விடயங்களை கண்டு நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நாங்கள் உங்களுக்கு பாதுகாவலராக ஆண்டவனுக்கு பிறகு இருப்போம் என்றும், உங்களுடைய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து தருபவர்களாக இருப்போம் என்றும், முடிந்த வரை செய்து தருவோம் என்றும் தெரிவித்தார்.

ஊத்துச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சதர்சன், பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், எச்.எம்;.தௌபீக், முஸ்தபா கலீல், nகிராம சேவை உத்தியோகத்தர், கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான பன்னிரண்டு தையல் இயந்திரங்கள், மீனவர்களுக்கான இருபது மீன்பிடி வலைகள், முப்பத்தியாறு மண்வெட்டிகள் மற்றும் பத்து சோளன் விதை பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *