இலங்கையில் இணைய தளங்களை பதிவுசெய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முடக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் பிரதியமைச்சர் கருணாரத்ன பரண வித்தான நிராகரித்திருக்கிறார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் பேசிய அவர், இணைய தளங்களை பதிவுசெய்யும் நடவடிக்கை 2011, 2012ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆட்சி காலத்தில் இணைய தளங்களை பதிவுசெய்ய வேண்டுமென உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை நிராகரித்த நீதிமன்றம் இணைய தளங்களை பதிவுசெய்யும் வேலைத் திட்டமொன்று அவசியமென உத்தரவிட்டதாக பிரதியமைச்சர் பரண வித்தான தெரிவித்தார்.
இதன்படியே 2011ஆம் ஆண்டு முதல் இணைய தளங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்தாகவும் அவர் கூறினார்.
இந்த விதிமுறைகளின்படி கடந்த வருடத்திலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக நினைவூட்டும் பத்திரிகை அறிவித்தலொன்று பிரசுரிக்கப்பட்ட பின்னரே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இணைய தளங்கள் பெரும் அளவில் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் குறித்து தெரிந்து கொள்ளும் அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பரண வித்தான அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதேபோல, தகவல் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தங்களுக்கும் தருமாறு இணையதளங்களை நடத்துபவர்கள் கூறும் நிலையில், அதற்கு இணைய தளங்களை பதிவு செய்வது அவசியமென்றும் கருணாரத்ன பரணவித்தான கூறினார்.