சில ஊடகங்கள் அரசாங்கத்தை தாக்குவதற்காக ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விசேடமாக ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் உரிமை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
ஒரு காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் காணப்பட்டன. எந்த ஊடகங்களுக்கு அவை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.தாம் விரும்பியபடி எந்த ஊடகவியலாளர்களையும் தாக்கினர். கொலை செய்தனர். தடுத்து வைத்தனர்.
இந்த முக்கியமான நிகழ்வில் எமது ஊடகவியலாளர்கள், ஊடகப் பிரதானிகள் இங்கு இருக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால் எவரும் இல்லை. அரசாங்கத்தில் இரண்டு பிரிவுகளில் தலைவர்கள் உள்ளனர்.
லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னேலிகொட, கீத் நொயார், உபாலி தென்னகோன் இவர்களை கொலை செய்து, தாக்கியமை தொடர்பில் எந்தவிமான அக்கறையும் இல்லை என்ற நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுள்ளது.
தமக்கு அக்கறையில்லை என்று இந்த ஊடகத்தினர் கூறுகின்றனர். அப்படியானால் ஊடக சுதந்திரம் தேவையில்லை. அவர்களுக்கு ராஜபக்ச அரசாங்கமே தேவைப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்தாவது ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டு வந்து மீண்டும் ஊடகவியலாளர்களை கொலை செய்ய வேண்டும் என்ற கூறுகிறீர்கள்?. இது குறித்து என்னிடம் என்றுமே கேள்விகளை கேட்டதில்லை.
அஜித் பீ. பெரேராவின் படத்தை 10 தடவைகள் போட்டு காண்பித்த அந்த ஊடகம் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்து 5 தடவையேனும் காண்பித்து என்ன நடந்தது என்று கூட கேட்கவில்லை.
நான் கூறுவதை ஒளிப்பரப்புவார்களோ தெரியவில்லை. என்னை விமர்சிப்பார்கள், ஆனால் இதுதான் உண்மை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.