(MB.SAHUFAN)
எம்மதத்தின் கலாச்சார செயற்பாடுகளையும் தடுப்பதோ! அல்லது அதனை கொச்சைப்படுத்தும் முறையில் அறிக்கை விடுவதோ! முற்றிலும் தவறான நடவடிக்கையாகும்.
அந்த வகையில் கடந்த கிழமை சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு அரச பாடசாலைகளில் பணிபுரியும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை சம்பந்தமாக சட்டத்திற்கு முரண்பட்ட வகையில் செயற்பட்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் மூடத்தனமான சொல்லுக்கு கட்டுப்பட்டு திருகோணமலை சண்முகா பாடசாலை நிர்வாகமானது இனவாதக் கருத்துக்களை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை பொது மக்கள் சகிதம் முன்னெடுத்துள்ளது யாவரும் அறிந்ததே!
முஸ்லிம் ஆசிரியைகள் ஆடை குறைப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் இது இந்துக்களுக்கான தனிப்பட்ட பாடசாலை இங்கு வேறு மதத்தவர்கள் பணியாற்ற வேண்டுமென்றால் அவர்கள் இந்து மத கலாச்சாரத்தினை பின்பற்ற வேண்டுமென்ற அனாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து பகிரங்கமான இனவாத நடவடிக்கையினை மேற்கொண்டது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயலாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாம் அனைவரும் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டிருக்கின்றோம், எனவே நாம் அனைவரும் இந்த நாட்டின் பொதுவான சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுவது எமது கடமையாக இருந்து கொண்டிருக்கின்றது, இந்த நாடானது தமிழர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தமானதல்ல என்பதினை நாம் முதலில் தெளிவு பெற வேண்டும், அவ்வாறு தனியொரு இனத்திற்கு சொந்தமாக இருக்குமானால் அவர்களின் சமய ,கலாச்சார விழுமியங்களை முற்றிலும் நடைமுறைப்படுத்தலாம் அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துமில்லை, அவ்வாறில்லாமல் பல இன,மதம் வாழுகின்ற இந்த நாட்டில் பொதுவான சட்டதிட்டத்திற்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக மாற்று மதங்களுக்கும் அம்மதத்தின் கலாச்சார விழுமியங்களுக்கும் எதிராக மக்கள் மன்றத்தில் எதிர் அறிக்கைகள் விடுவது சட்டத்திற்கு முன் பாரிய குற்றச் செயலாகும் என்பதினை சண்முகா பாடசாலையின் பிரச்சினைக்கு காரணகர்த்தாவாக இருக்கின்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
சமகாலமாக வெளிநாட்டில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப உள்நாட்டில் பல இயக்கங்கள் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டினை தோற்றுவிக்கின்றனர், அவர்களின் சுயலாபங்களுக்காகவே அப்பாவி பொது மக்களை மத ரீதியாகவும் இனரீதியாகவும் பிரித்து யுத்தத்திற்கு வழிவகுக்கின்றனர் என்பதினை கடந்தகால பல சம்பவங்கள் எமக்கு உணர்த்தக்கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றன, அவ்வாறில்லாமல் உள் நாட்டில் இன மதம் வேற்றுமை பாராது சகோதரத்துவமாகவே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே படித்த பண்புள்ள சமூகமாக இருக்கின்ற நாம் மாற்று மதத்தினை மதித்து நடக்கின்ற சிறந்த பண்பாளர்களாக எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் அத்துடன் எமது எதிர்கால சமுதாயத்திற்கு இனவாதம் மதவாதம் என்ற கொடிய நஞ்சினை ஊட்டாமல் பாடசாலைகளில் இனவாதத்திற்கு பதிலாக சகோதரத்துவ பண்பையும் சிறந்த ஒழுக்கத்தினையும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் முக்கிய பங்காகும், அதேவேளை அவரவர் மதத்தினையும் அவர்களது கலாச்சார விழுமியங்களினையும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் யாருக்குமில்லை என்பதினையும் நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.