நியூயார்க்,அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு நிறைந்தவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக மோடி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டிற்கான உலகின் செல்வாக்கு நிறைந்த 100 பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. இதற்கான 127 பேர் கொண்ட உத்தேச பட்டியலை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இறுதி பட்டியலை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அறிவியல், சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 127 பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தேச பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஹிலாரி கிளிண்டன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், போப் பிரான்சிஸ், ஹாலிவுட் நடிகர் ராக் ஜான்சன், டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், வடகொரிய அதிபர் கிம் ஜோன் யுன், சானியா மிர்சா, மலாலா, ஹாவுட் நடிகர் லியோனார்டோ டிகார்பியோ, நடிகை ஜெனிபர் லாரன்ஸ், பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்டே, பில்கேட்ஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய வம்சாவளி நடிகர் ஆசிஸ் அன்சாரி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, மியான்மர் ஆங்சாங் சூகி, மைக்ரோ சாப்ட் சத்யா நதெல்லா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.