உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகள் நாட்டுடமையாக்கப்படும்: வெனிசுவேலா அதிபர்

வெனிசுவேலாவில் உற்பத்தியை நிறுத்தியுள்ள தொழிற்சாலைகளை அரசுடையாக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் இந்த பகிரங்க எச்சரிக்கை வந்துள்ளது.

தொழிற்சாலை உரிமையாளர்கள் நாசவேலையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய அவர் இதற்காக அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது தெரிவித்துள்ளார்.

இவர் இப்படி குற்றம் சாட்டினாலும் தொழிற்சாலை முதலாளிகள் இந்த பிரச்சனைக்கு வேறு காரணங்களைத் தெரிவிக்கிறார்கள்.

தமது உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான போதிய வெளிநாட்டு நாணயக் கையிருப்பு தம்மிடம் இல்லை என்று முதலாளிகள் கூறுகின்றனர்.

இதனிடையே அதிபர் மதுரோவை பதவி விலக அழுத்தம் கொடுக்கும் வகையிலான ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று, தலைநகர் கரகாஸில் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று அதிபர் மதுரோ நாடாளவிய அவசர நிலையை அறிவித்தார். வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பை நாடு எதிர்கொள்வதாகவும் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அது காரணமாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

வெனிசுவேலாவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி தனது நாட்டு இராணுவத்திற்கு மதுரோ உத்தரவிட்டிருந்தார்.

வெனிசுவேலா நாட்டின் எதிர்கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கொலம்பியாவின் முன்னாள் அதிபரும் வலதுசாரியுமான அல்வரோ உரிபி அழைப்பு விடுத்திருந்ததைத் தொடர்ந்து மதுரோ தமது நாட்டு இராணுவத்துக்கு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

Related posts

மலையக மக்களுக்கு மூவாயிரம் மில்லியன் நிதி!

Editor

மன்னார்,கரிசல் மையவாடி! 3 பேருக்கு விளக்கமறியல்

wpengine

104 இந்தியர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்திய அமெரிக்கா.!

Maash