மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள, உயிலங்குளம் கமநலசேவைகள் நிலையம் நல்லாட்சி உருவாக்கப்பட்டு நீண்டகாலமாகியும் புனரமைக்கப்படாமையினால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு இடப்பெயர்வின் பின் குறித்த கமநலசேவைகள் நிலையம் கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1993ம் ஆண்டு அதனை பொலிஸார் கையகப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் 2002ம் ஆண்டு பொலிஸார் அப்பகுதியிலிருந்து விலகியது முதல் மீண்டும் கமநலசேவைகள் நிலையமாக இயங்கி வருகின்றது
கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடம் சேதமடைந்துள்ளதுடன் பாழடைந்து பாரிய வெடிப்புகளும் உருவாகி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
இதனால் அங்கு பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் தேவைகருதி வரும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
இப்பகுதியில் 17 விவசாய அமைப்புக்கள் இருக்கின்ற நிலையில் சுமார் 5000 ஏக்கர் விவசாயிகளுக்கென விவசாய நிலங்களாக பதிவிலுள்ளன. இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள் பயனடைகின்றனர்.
இந்நிலையில் பல வருடங்கள் ஆகியும் குறித்த கமநல சேவைகள் நிலையம் புனரமைக்கப்படாமையினால் விவசாயிகள் தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கட்டிடம் இடிந்து விழக்கூடிய நிலையேற்பட்டுள்ளது.
இங்கு பணிபுரியும் 7 பணியாளர்களும், தேவைகருதி இங்கு வரும் விவசாயிகளும் கட்டிடத்தை மேலேயும் கீழேயும் பார்த்த வண்ணம் பீதியில் தங்கள் வேலைகளை செய்து வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த போதிலும் குறித்த கமநல சேவைகள் நிலையத்தை புனரமைப்பதில் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
இந்த நிலையில் குறித்த கட்டிடத்தை விரைவில் புனரமைத்து விவசாயிகள் பயனடையக்கூடிய விதத்தில் அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.