முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான ஏ.எல்.எம். கலீல் மௌலவி மற்றும் எச்.எம். இல்யாஸ் மௌலவி அவர்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென மூவர் கொண்ட குழுவொன்றை கட்சி அண்மையில் நியமித்துள்ளது.
இது சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் அக்கட்சியின் ஒழுக்காற்றுக்குழுவின் முன்னாள் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
மேற்படி இரு மௌலவிமார்களும் கட்சியின் நீண்டகால உறுப்பினர்களாகவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் இணைந்து அம்பாரை மாவட்டத்தில் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக மௌலவி ஏ.எல்.எம். கலீல் அவர்களும் அதே போன்று கண்டி மாவட்டத்தில் முன்னணி உறுப்பினர்களில் ஒருவராக எச்.எம். இல்யாஸ் மௌலவி அவர்களும் செயற்பட்டு வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்து கட்சியின் நன்மைக்காக உழைத்து வந்தவர்கள் எனவும் கட்சி கஷ்டபட்ட காலங்களில் கனிசமான பங்களிப்புக்களையும் வழங்கி வந்துள்ளார்கள் என்பதனை நாம் நன்கு அறிவோம்.
மேலும் மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் கூட இது போன்று எத்தனையோ பிரச்சினைகள் கட்சிக்குள் எழுந்த போது அவைகள் அத்தனையையும் மிகவும் சுமூகமாக தீர்த்துவைத்த வரலாறுகளும் நிறையவே உண்டு. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட கட்சித் தொண்டர்கள் விசாரணையின் பின் குற்றவாளிகளாக காணப்பட்ட போதும் அவர்களை மன்னித்து கட்சி நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுத்திய சம்பவங்களுக்கு நான் சான்று பகர்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஒரு சிலர் பின்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு கட்சிக்கு உரமூட்டியவர்களும் உண்டு எனவும் அக்கடித்தில் சட்டத்தரணி கபூர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவைகளுக்கு ஆதாரமாக பத்திரிகைச் செய்தியின் பிரதியையும் முன்னாள் கட்சியின் தலைவரினால் பணிக்கப்பட்;டு தனக்கு எழுதப்பட்ட கடிதத்தையும் பார்வைக்காக அவர் அதில் இணைத்துள்ளார்.