(தமிழ் மக்கள் பேரவை)
மீண்டுமொரு முறை உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றறேன்.
எமது இனத்தின் நீதிக்கான நெடும்பயணத்தில் இந்த யூலை மாதம் முக்கியமானது. எம்மையும் எம்மீது புரியப்படும் கொடூர இன அழிப்புக்களையும், எம் மக்களின் உறுதியையும் மக்களுக்காக பாரம் சுமந்தவர்களினது ஈகத்தையும் இந்த உலகிற்கு வெளிப்படுத்திய மாதம், இந்த யூலை மாதம்.
இனத்துக்கான அர்ப்பணிப்புக்களிலும் அழிவுகளிலும் எமது சரித்திரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்ற இந்த மாதத்தில் நாம், எம் இனத்தின் எதிர்காலம் குறித்த தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்றிற்காக இங்கு கூடியிருக்கின்றோம்.
இத்தருணத்தில், இந்த அர்ப்பணிப்புக்களின் பெயரில், அழிக்கப்பட்ட அனைத்து உயிர்களின் பெயரில், நாம் அனைத்து சுயலாப, தேர்தல் மைய, உணர்ச்சி அரசியல்களை விடுத்து, இனத்தின் நீண்ட கால நன்மைக்காக, இனத்தின் நன்மைக்காக மட்டும், மனச்சாட்சியுடன் பணிகளை மேற்கொள்வோம் என தமிழ் மக்கள் அனைவரும் உறுதியெடுத்துக்கொள்கின்றோம்.
இரத்தங்களோடும் இழப்புகளோடும் பயணித்த எமது தேசிய இனத்தின் நீதிவேண்டிய பயணம் தற்போது மிக முக்கியமான காலகட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
தமிழர் அரசியலின் மிக முக்கியமான இந்த தருணத்தில், காலத்தின் அவசியமாகவே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றிருந்தது.
2009 இன் பின்னர் எமது நீதிக்கான வேட்கையும் பயணமும் வன்முறைமூலம் அடக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு எண்ணியிருந்த வேளையில், எதுவித இழப்புகள்வரினும், எம்மக்களின் உரிமை விட்டுக்கொடுக்கப்படமுடியாதது எனும் செய்தியை தமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மிகத்தெளிவாக சிறிலங்கா அரசிற்கும் உலகிற்கும் எமது மக்கள் எடுத்துக்கூறி வந்திருக்கின்றனர்.
எமது இனத்தின் அழிவுகளுக்கும் காரணமும் பின்னணியும் பௌத்த சிங்களத்தை முன்னிலைப்படுத்தும் பேரினவாத சிந்தனையும், எமது தயாத்தை, வடக்கு மற்றும் கிழக்கு என பிளந்து, ஒரு தேசிய இனமான எம்மை தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பு அற்ற, வெறும் ஒரு சிறுபான்மை இனமாக மாற்றும் நீண்ட கால திட்டமும் அதன்மூலம் சுயநிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கையின் நியாயத்தை நீர்த்துப்போகச் செய்வதுமே ஆகும்.
இந்த அழிவுகள் தந்த பாடங்கள் தான், எமக்கு, மதச்சார்பற்ற நாடும் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, பூரண சமஷ்டியும் எமது இனத்தின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் அவசியமானது என்பதை எமக்கு மீளமீள வலியுறுத்தி நிற்கின்றன.
எமது வரலாற்றுத் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், மத சார்பற்ற, சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு பூரண சமஷ்டியையே நாம் வேண்டி நிற்கின்றோம் என்பதை அழுத்த திருத்தமாக எமது மக்கள் பல தடவைகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
எமது மக்களின் இந்த அடிப்படை அரசியல் அபிலாசைகள் அழிக்கப்படமுடியாதது என்பதை புரிந்துகொண்ட இந்த அரசாங்கம், தன் கபடமான அணுகுமுறைமூலம், எம் மக்களின் அடிப்படை அபிலாசைகளை எதுவிதத்திலும் பூர்த்தி செய்யாத ஒரு அரசியலமைப்பை, போலி முலாம்களை பூசி இனப்பிரச்சினைக்கான தீர்வு எனும் பெயரில், எம் மக்களின் சம்மத்தினை பெற எத்தனிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, எம் இனத்தின் வழமையான வரலாற்று துயரமாக, எம்மிற் சிலரும் இதற்கு உடந்தையாக,
இந்த அரசாங்கம் ஆரம்பம் முதலே அமையப்போகும் புதிய அரசியலமைப்பானது, எந்த விதத்திலும் ஒற்றையாட்சியை விட்டுக்கொடுக்காத, அதாவது சமஷ்டி அற்ற, வடக்கு கிழக்கு இணைப்பு அற்ற, குறித்த ஒரு தனியான மதத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கின்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என மிகத்தெளிவாக வலியுறுத்தி வந்திருக்கின்றது.
தவிர புதிய அரசியலமைப்பினை வரையும் முக்கியமான பலரும் இந்த கருத்தை மீள உறுதி செய்திருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் மேலாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியும், நாட்டின் பிரதமரும், பௌத்த மத பீடாதிபதிகளிடம் பகிரங்கமாகவே மேற்சொன்ன நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் எமது அடிப்படை அபிலாசைகளை எந்த விதத்திலும் திருப்திப்படுத்தாத அல்லது எமது அடிப்படை அரசியல் விருப்புகள் அனைத்தையும் வெளிப்படையாகவே நிராகரிக்கின்ற, இந்த அரசியலமைப்பை பொய்களால் வர்ணம் பூசி வார்த்தை ஜாலங்கள் மூலம் எம்மீது கபடத்தனமாக திணிக்கும் முயற்சிகளில், இந்த அரசு இறங்கியுள்ளது.
எமது அரசியல் கோரிக்கைகள், வெறுமனே சட்ட அரசியல் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரைவிலக்கணங்களின் திரட்டு அல்ல. இது ஒரு கட்டடத்துக்குள் நடத்தப்பட்ட ஒரு அரசியல் விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவும் அல்ல. இது வரலாறு எமக்கு தந்த படிப்பினை. எமது அழிவுகள் எமக்கு சொல்லித்தந்த தற்காப்பு கோரிக்கை. இரத்தமும் சதையுமுhக கடந்த எழுபது ஆண்டுகள் எமது மக்கள் பட்ட துன்பத்தின் பட்டறிவினால் கண்டறிந்த முடிவுகள். மனசாட்சியுடைய மனிதர்கள் எவரும் இதை நிராகரிக்கமுடியாது. இதை மீறி எம்மீது எதையும் திணிக்கவும் முடியாது.
நவீன ஜனநாயக உலகின் நடைமுறைகளுக்கமையவே நாம் எமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சகல மதங்களும் சமனாக இருக்கவேண்டும் என்பதோ, வரலாற்று ரீதியான தொடர்ச்சியான நிலப்பரப்பும் தனியான மொழி, கலாச்சாரம் பண்பாடும் உடைய ஒரு தேசிய இனமானது, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையது என்பதோ, இன்னொருவரின் முடிவை பிறர் மீது திணிக்காத சுயாதீன ஆட்சிமுறையான சமஷ்டி என்பதோ, நியாயமற்றவை என எவராலும் கூறமுடியாதவை. நவீன உலகின் நடைமுறை ஆட்சி அதிகாரங்கள் மேற்சொன்ன வழிகளிலேயே ஒழுகுகின்றது.
அதிலும் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்ட ஒரு இனம் தன் இனத்தின் இருப்பின் பாதுகாப்பிற்கு இந்த கோரிக்கைகளை முன்வைப்பது அவசியமானதும் கூட. ஆனால் “நடைமுறை யதார்த்தம்” எனும் பெயரில் நாகரிகமடையாத நடைமுறைகளாகிய, குறித்த ஒரு மதத்;தை மட்டும் பிரதானப்படுத்துகின்ற, மத்தியின் அதிகாரங்களை ஏனையவர்களிடம் திணிக்கின்ற, ஒரு தேசிய இனம் தம்மை தம் வாழ்வியலை நிர்ணயிக்கும் எந்த வித உரிமையையும் மறுதலிக்கின்ற எமது வரலாற்று தாயகத்தை இரண்டாக பிளக்கின்ற ஒரு யோசனையை எம்மீது விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். எமது அபிலாசைகளை எதுவிதத்திலும் அணுகாத இந்த போலி” பொதியை” தீர்வு எனும் பெயரில் ஏற்றுக்கொள்வதன் மூலம், எமது நீதிக்கான பயணத்தை முன்னே கொண்டு செல்ல முடியாத படி நாமே முற்றுப்புள்ளி வைத்தவர்களாகின்றோம்.
ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பொன்றை தீர்வு எனும் பெயரில் ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த ஒற்றையாட்சிக்குட்பட்டே எதையும் அணுக வேண்டிவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட பின்னர் படிப்படியாக சமஷ்டியை நோக்கி நகர என்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயற்பாடாகும்.
ஏற்கனவே எமது மக்களின் பொருட்டு எதுவுமே நடைபெறாத அரசியலமைப்பு பணிகாளனது, தீர்வை நோக்கி முன்னேற்றகரமாக நகர்வதாக எம்மவர்களையே கூறவைத்து, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இருந்து ஏறத்தாழ தப்பித்துக்கொண்டுள்ள அரசாங்கம், இப்போது, எமது அடிப்படைக்கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரிக்கின்ற இந்த “தீர்வு” பொதியையும் எம்மைக்கொண்டே ஆமோதிக்கப்பண்ணி, இதையும் முடக்கி விட முயற்சி செய்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில்தான், எமது மக்களின் அரசியல் தெளிவு முக்கியத்துவம் பெறுகிறது. வெறும் மேடை, உணர்ச்சி பேச்சுக்களை தாண்டி, ஊடகங்களின் பரபரப்பான தலைப்பு செய்திகளை தாண்டி, அனைத்தின் உள்ளடக்கங்களையும் நாம் விழிப்புடன் ஆராய்ந்து அணுக வேண்டும் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். தொடர்ச்சியான இழப்புகளாலும் நம்பிக்கையீனத்தாலும் தோல்வி மனப்பான்மையாலும் சலித்து போயிருக்கும் எங்களை குழப்பி, தமது அரைகுறை “பொதியை” தீர்வு எனும் பெயரில் திணிப்பதற்கு முயலும் திட்டங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டிய காலகட்டம் இது. உத்தேச அரசியலமைப்பு குறித்த முக்கியமான விடயங்கள் வெளிப்படையாகவே பொறுப்புவாய்ந்தவர்களால் சொல்லப்பட்டிருக்கும் நிலையில், அரசியலமைப்பு பூரணமாக வெளிவரும்வரை மக்களுக்கு ஒன்றும் சொல்லாது காத்திருப்போம் என சொல்வது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயற்பாடே ஆகும்.
தமிழ் மக்கள் பேரவையில் கடந்த கூட்டத்தொடரொன்றில் நான் குறிப்பிட்டிருந்தவாறு, இந்த அரசாங்கமானது இந்த போலி தீர்வு யோசனையை எம்முள் திணிப்பதற்கு, “செயற்கையான நடைமுறை அழுத்தங்களையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கி அதன்மூலம் தன் திட்டங்களை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும்”
உணர்ச்சி அரசியலுக்கு பலியாகது, மக்களை அரசியல் விஞ்ஞான ரீதியாக தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள சக்திகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செய்ய வேண்டும். எமது அரசியல் கொள்கையின்பாற்பட்ட ஒற்றுமை இங்குதான் தேவைப்படுகிறது. எமது மக்களின் அடிப்படை விருப்புகளை, அரசியல் விஞ்ஞான வார்த்தை ஜாலங்கள் மூலம் ஏமாற்றும் முயற்சிகளில் இருந்து பாதுகாக்க, அரசியல் அறிஞர்கள் , சட்டத்துறை சர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை சார்பில ;வேண்டுகிறோம். இந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகள் எமது மக்களின் ஜனநாயக கோரிக்கைகளிற்கானதே தவிர எவருக்கும் எதிரானது அல்ல. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் விருப்புகளையும் நவீன உலகின் நடைமுறை அரசியல் முறைமைகளையும் கருத்திற்கொண்டு, எம் மண்ணின் அரசியலாளர்களினதும் மக்களினதும் பங்களிப்புடன் தமிழ் மக்கள் பேரவை கடந்த ஆண்டு உத்தேச தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தது. அந்த அடிப்படைகளை முன்வைத்து, எமது தாயகத்தின் அனைத்து மக்களையும் அணுககூடிய விதத்தில் ஒரு விழிபு;புணர்வுப் பொறிமுறையை தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்க உள்ளது. பிரதேச ரீதியான கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் என தொடர இருக்கும். இந்த விழிப்பூட்டல் பணிக்கு ஆர்வமுள்ள அனைத்து செயற்பாட்டாளர்களும் தமது கரங்களை பேரவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு வெளிவரும்வரை அதற்காக காத்திருப்போம் என கூறுவது மக்கள் அதை ஆராய்வதற்காக கால அவகாசத்தை இல்லாததாக்கி, அவசர அவசரமாக அதை திணிக்க முயலும் அரசின் சதிமுயற்சிக்கு துணையாகவே அமையும். எனவே அரசியலமைப்பு குறித்த விஞ்ஞான ரீதியிலான தெளிவுபடுத்தல்களை நாம் கால தாமதமின்றி பரவலாக முன்னெடுக்கவேண்டும். இந்த அரசியல் விழிப்பூட்டல் நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மக்களிடம் சென்று எமது தேவையையும் யதார்த்தத்தையும் ஒளிமறைவின்றி உண்மையாக பேசுதல் ஒன்றே இப்போது தேவையானது. உண்மை என்பது அனைவருக்கும் எப்போதும் ஒன்றுதான். உண்மை மாறப்போவது இல்லை. எனவே இந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகளுக்கு நாம் எவரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. இது நாம் அனைவருக்குமான பொறுப்பு என்பதை நாம் உணர்ந்து கொண்டு செயற்படுவதே இன்றைய தேவையாகும்.
ஒரு “அரசு” (ளுவயவந), தனது திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு முனைகளை திறக்கும். அதன் ஆளணி, பணபலம், படைபலம், சர்வதேச உதவி, முகவரமைப்பு வேலைகள் என பல படிநிலைகளில் இது நடக்கும் ‘அரசு’ களுக்கு அது இலகுவான காரியம். ஆனால், அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசற்ற ஒரு தேசிய இனமாகிய நாம் இவற்றையெல்லாம் எதிர்கொள்ள எமக்கு இருப்பது எமது மக்களின் கொள்கை உறுதி மட்டுமே. எனவே, எம் மக்களின் இழப்புக்களின் மேலும், எம் மக்களுக்காக பாரம் சுமந்தவர்களின் அர்ப்பணிப்புக்களின் பேரிலும், எமது கட்சிசார், தேர்தல் நலன்சார், சுயலாப அரசியல் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, நாம் மனச்சாட்சியுடன் கொள்கையின் பாற்பட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே எம் இனத்தின் மீதான இந்த சதி முயற்சியை வெற்றி கொள்ள முடியும். இனத்தின் நலன் மட்டும் கருத்திற்கொண்டு நாம் அனைவரும் கொள்கையின் ஒன்றுபடுவோம் என அழிவுகளாலும் அர்ப்பணிப்புக்களாலும் நிரம்பிப்போன இந்த யூலை மாதத்தில், தமிழ்மக்கள் பேரவை சார்பில் நான் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றேன்.