ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கு முக்கிய பொறுப்பு கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் தவிசாளர்.
இதனை பெரும்பான்மையின மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆகவே இனி குண்டுத்தாக்குதலுக்கு ஐக்கிய தேசிய கட்சி பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட முடியாது. என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான தெரிவித்தார்.
கொழும்பு – புதிய நகர மண்டபத்தில் நேற்று இரவு இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு கூற வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முப்படை அதிகாரங்களையும் தன்வசம் வைத்துக் கொண்டு இவரால் குண்டுத்தாக்குதலை தவிர்க்க முடியவில்லை.
அரசாங்கத்துடன் தொடர்ந்து முரண்பட்டு கொண்டமையினால் முறையான அரச நிரவாகத்தை முன்னெடுத்து செல்ல இவரால் முடியவில்லை.
குண்டுத்தாக்குதலுக்கு ஐக்கிய தேசிய கட்சியினர் பொறுப்பு கூற வேண்டும் என்று அரசியல் பிரச்சாரம் செய்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.
குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் தலைவர்.
இதனை பெரும்பான்மையின மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் பலவீனத்தன்மை மூன்று மாத காலத்திற்குள் வெளிப்பட்டு விட்டது.
கடந்த அரசாங்கம் மக்களுக்கு முன்னெடுத்த பல அபிவிருத்தி திட்டங்கள் இன்று அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் சாதாரண நடுத்தர மக்களையே இன்று சென்றடைந்துள்ளது.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியுடன் அரசாங்கம் இணங்கி செயற்பட வேண்டிய தேவை கிடையாது.
அரசாங்கத்துடன் தான் ஜனாதிபதி இணக்கமாக செயற்பட வேண்டும். நிச்சயம் பொதுத்தேர்தலை தொடர்ந்து 113ற்கும் அதிகமான பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்.
ஜனாதிபதி விரும்பினால் அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்படலாம். விரும்பாவிடின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்று முரண்பட்டுக் கொண்டு செயற்படலாம்.
ஜனாதிபதியின் ஆதரவு இல்லாமலே சிறந்த அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.