2019 இல் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் தலைமை சூத்திரதாரிகளாக கைது செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு மௌலவிகளின் பெயர்களை அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த இருவரும் அதன் சூத்திரதாரிகள் அல்ல என்றும், உண்மையான சூத்திரதாரிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும், குறித்த நபர்கள் தனக்கு தெரியும் என்ற ரீதியில் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதாவது அரசாங்கம் அறிவித்த இருவரது பெயர்களையும் நிராகரிப்பதகவே அவரது அறிக்கை அமைந்திருந்தது.
அதேநேரம் நேற்று அதாவது 18.04.2021 அன்று ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்தும்போது “”தங்கள் அரசியல் சக்தியை வலுப்படுத்தவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஒரு குழுவினரால் நடாத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடாத்தியது மத தீவிரவாதம் அல்ல.”” என்று கூறியுள்ளார்.
அத்துடன் “”தமது அரசியல் அதிகாரத்தினை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஏனையவர்களை கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள்”” என்ற கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களின் அறிவுரை மிகவும் சிந்திக்கத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகும்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றதிலிருந்து இன்று வரைக்கும் அதுபற்றிய அரசியல்வாதிகளின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்து வருகின்றது. இந்த முரண்பாடான அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக தொகுத்து ஆராய்ந்தால் மயக்கம் விழும் நிலை ஏற்படும்.
குண்டு தாக்குதலை நடாத்தியது இந்தியா என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய அதே வாயினால் பின்னாட்களில் இந்தியாவை காப்பாற்றும் நோக்கில் கருத்துக்கள் அமைந்திருந்ததுடன், அது வேறு ஒரு பொதுவான முஸ்லிம்களின் எதிரி நாட்டின்மீது விரல் நீட்டப்பட்டதனையும் காணக்கூடியதாக உள்ளது.
யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும். ஆனால் யாரோ செய்த குற்றத்திற்காக எதுவுமறியாத முழு அப்பாவி முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகிப்பதோ அல்லது தண்டிக்க முற்படுவதோ கூடாது.
எனவே ஈஸ்டர் தாக்குதலை காரனமாக்கொண்டு முஸ்லிம்கள் மீது மாற்றான் தாய் மனப்பான்மையில் சட்டங்களை இயற்றி தண்டிக்க முற்படுகின்ற இன்றைய காலத்தில், கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் அறிக்கையானது முஸ்லிம் சமூகத்துக்கு ஓர் ஆறுதலாக அமைகின்றது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது