Breaking
Sat. Nov 23rd, 2024

உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் என்பனவற்றிலும், ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக்ஷைட் உள்ளிட்ட விருந்தகங்களில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பெருமளவானோர் காயமடைந்தனர்.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று (21) காலை 8.45க்கு, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பொதுமக்களிடம் கோரினார்.

இதேநேரம், குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட ஆராதனை இடம்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு, நேற்று பிற்பகல் 4 மணி முதல் இன்று (21) மதியம் 12 மணிவரை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாபிட்டி தேவாலயத்திலும், இன்று (21) மாலை 6 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று (21) காலை விசேட ஆராதனையுடன், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அனைத்து மறைமாவட்ட ஆலயங்களிலும் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *