(கரீம் ஏ. மிஸ்காத் யாழ்ப்பாணத்தில் இருந்து)
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடா லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் “கெரி ஆனந்தசங்கரி” நற்புரீதியான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி, பெரிய மொகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு நேற்று விஜயம் செய்தார்.
அவர் முஸ்லிம்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்:
இஸ்லாம் சமயம் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் மார்க்கம். முஸ்லிம்கள்கள் சினேகபூர்வமானவர்கள்.
இன்று உலகில் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள்.
எனினும் முஸ்லிம்களைப் பற்றி உலக நாடுகளில் தப்பாக கண்பிக்கப்படுகின்றது, பயங்கர வாதிகளாக காட்டுகின்றார்கள், இதனால் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலை இலங்கையில் இல்லை.
நான் முஸ்லிம்களுடன் மிக நீண்டகாலமாக நட்பு கொண்டவன், கனடாவில் 1மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அங்கு முஸ்லிம் பெண்கள் அணியும் தலை, முகம் மறைக்கும் ஆடைகள் அணிவது தொடர்பாக சில பிரச்சினைகள் எழுப்பப்பட்டது. அதன் போது நானும், எமது கட்சியும் முஸ்லிம் பெண்கள் அணியும் தலை மறைப்பு ஆடைகளுக்கு தடை விதிப்பதற்கு எதிராக குரல் கொடுத்தோம். இது முஸ்லிம்களின் கலாச்சார விடயம். முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமை. இந்த விடயத்தில் யாரும் தலையிட முடியாது. மனித உரிமை மீரளாகவும் அது காணப்படுகின்றது. என்றார்
மேலும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு தனியிடம் இருக்கின்றது, அவர்கள் பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். அவர்களின் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.
இப்போது இந்த இடத்தில் முஸ்லிம்களையும், முஸ்லிம் நண்பர்களையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
குறுகிய கால இடைவெளியில் இலங்கைவந்துள்ளதால் போதியகால அவகாசம் கிடைக்கவில்லை. எனினும் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், யாழ்- கிளிநொச்சி உலமா சபை செயலாளர் மெளலவி அஸீஸ், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப், யாழ் – கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத் தலைவர் ஜமால், யாழ். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை தலைவர் நிலாம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.