Breaking
Sun. Nov 24th, 2024
நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறைமைகளுக்கு எதிராகவும், அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அமானா வங்கிக்கு எதிராகவும் இனவாத அமைப்புக்கள் கோஷமிடுவதை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாத கொள்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மீதான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முஸ்லிம்களுக்கும் அதிக பங்குள்ளமை அனைவருக்கும் தெரியும். முஸ்லிம்கள் தங்களுடைய பொருளாதார முறைமைகளை வங்கிகளின் ஊடாக மேற்கொள்ளும் வகையிலும், அதனை இஸ்லாமிய சட்ட வரையறைக்குள் செய்து கொள்ளும் வகையிலும் வங்கி நடவடிக்கைகள் அமையப்பெற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாளாக முன்வைத்து வந்தனர். அந்த அடிப்படையில் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கி சட்ட திருத்த மூலம் 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது. இச்சந்தர்பத்தில் இஸ்லாமிய வங்கி முறைமை நாடாளுமன்றத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் இன்று அது சட்டமாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் இந்நாட்டில் இஸ்லாமிய வங்கி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கமைய 2011ஆம் ஆண்டு அமானா வங்கி என்ற இஸ்லாமிய அடிப்படையிலான புதிய வங்கி ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கெமேர்ஷல் வங்கி, ஹெற்றன் நெஷனல் வங்கி உட்பட இந்தநாட்டில் இருக்கின்ற பொரும்பாலான வங்கிகள் மற்றும் லீசிங் கம்பனிகள் இஸ்லாமிய நடைமுறையிலான  வங்கிச் சேவைகளை ஆரம்பித்திருக்கின்றன.
இன்று அந்த வங்கிகள் ஊடாக தங்களுடைய மார்க்கத்துக்கு கட்டுப்பட்ட வகையிலே முஸ்லிம்களும் சேவைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவற்றை நிறுத்த வேண்டும் என்று இன்று சில குழுக்கள் கோஷமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்துக்கு இருக்கின்ற அதுவும் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டிருக்கின்ற ஒரு விடயத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் அண்மையில் மத்திய வங்கிக்கு முன்னாலும் மற்றும் பல இடங்களுக்கு சென்று கோஷமிட்டதை நாங்கள் அறிவோம்.
ஆகவே, நாங்கள் இவற்றின் மீது மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சகல சமூகங்களும் அவர்களுடைய மார்க்க அனுமதித்த வகையில் அவர்களுடைய வியாபாரத்தை செய்வதற்கான சூழ்நிலைகள் நாட்டில் உருவாக வேண்டும். அப்போதுதான் ஒரு நாடு முன்னேற்றமடைய முடியும்.
இனவாத – இனரீதியான சிந்தனைகளால் இந்நாடு குட்டிச் சுவராகியுள்ளது. இந்நாட்டிலே 30 ஆண்டுகள் கொடிய யுத்தம் நிலவியது. வடக்கு, கிழக்கிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வருமானத்தை அதிகரித்து, அவர்களுடைய வறுமையை போக்கி, அவர்களும் பொருளாதாரத்தில் பங்கெடுக்கின்ற ஒரு சமூகமாக மாற்றுவதற்கு நாம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எனினும், சில தீவிரவாக குழுக்கள் இனங்களுக்கு எதிராக சமூகளுக்கு எதிராக செயற்பட்டு மீண்டும் இந்நாட்டிலே இன ரீதியான ஒரு முறுகல் நிலையை உருவாக்குவற்கு முயற்சிக்கின்றன. மீண்டும் இந்நாட்டைக் குட்டிச் சுவராக்குவதற்கு சிலர் முனைகின்றனர். இவ்வாரான சில குழுக்களின் நடவடிக்கைகளினால் தான் கடந்த அரசாங்கத்தை சிறுபான்மை சமூகம் தூக்கியெறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆகவே, நாங்கள் இது தொடர்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவ்வாரான குழுக்களுக்கு இந்நாடாளுமன்றமும் இந்த அரசாங்கமும் இடமளிக்கக் கூடாது  என அரசிடம் வலியுறுத்துகிறேன்.- என்றார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *