ஷேக் ஆலம் என்பவர் கையில் திரிணாமூல் காங்கிரஸ் படத்துடன், இந்தியாவில் இருக்கும் 30 சதவீத இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் நான்கு பாகிஸ்தான்களை உருவாக்கலாம் என கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில், பிர்பும் மாவட்டத்தில் நனூர் எனும் ஊரில் இந்த 30 நொடி காணொளி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஷேக் ஆலம் என்பவர் “மைனாரிட்டிகளாகிய நாங்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கிறோம். மீதி 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இந்த 70 சதவீதம் பேரின் உதவியோடு மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என பாஜக நினைக்கிறது. இந்த 30 சதவீதம் பேர் ஒன்று சேர்ந்தால், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால், நான்கு பாகிஸ்தானை உருவாக்கலாம். அப்போது மீதி 70 சதவீதம் பேர் எங்கே செல்வார்கள்?” என பேசி உள்ளார்.
இதை பாஜக கடுமையாக விமர்சித்து இருக்கிறது. மமதா பானர்ஜி, ஷேக் ஆலமின் கூற்றை ஆதரிக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறது பாஜக.
ஷேக் ஆலம் அக்கட்சியின் உறுப்பினர் கூட கிடையாது, தங்களுக்கும் ஷேக் ஆலமிற்கும் எந்தவித உறவும் இல்லை. நாங்கள் அவரின் கூற்றை ஆதரிக்கவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அந்த நிலை தொடரும் என திரிணாமுல் காங்கிரஸ் தன் தரப்பில் இருந்து விளக்கமளித்திருக்கிறது.
இச்செய்தி தேர்தல் பரபரப்பில் இருக்கும் மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலையைக் கிளப்பி இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.